அமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்
அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கார் டிரைவரான சீக்கியர் ஒருவரை, குடிபோதையில் வந்த பயணிகள், அடித்து உதைத்து, தலைப்பாகையை அவிழ்த்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாபைச் சேர்ந்தவர், ஹர்கிரத் சிங், 25; மூன்று ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கா சென்று, அங்கு, வாடகை கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். நியூயார்க் நகரில், நேற்று முன்தினம், இவர் இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்றார்.
அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த நிலையில், வாடகை பணத்தை கேட்டுள்ளார். குடிபோதையில் இருந்த இருவரும், ஹர்கிரத் சிங்குடன் தகராறு செய்துள்ளனர். இருவரும், அவரை அடித்து உதைத்து, சீக்கியரான அவர், அணிந்திருந்த தலைப்பாகையை அவிழ்த்து தாக்கியுள்ளனர். பின், அங்கிருந்து அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர். இது குறித்து, ஹர்கிரத் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; அமெரிக்க வாழ் சீக்கியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி, ஹர்கிரத் சிங் கூறுகையில், ”என்னை அவமானப்படுத்தி விட்டனர். என் மத நம்பிக்கையை சீர்குலைத்து, என் மதத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டனர்,” என்றார்.