ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல்; ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு
ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான, பிரமாண மனுவை தாக்கல் செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 2016 அக்டோபரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தார். புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, 2016 டிசம்பருக்குள் தேர்தலை முடிக்கவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மே, 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடப்பதால், அது முடிந்த பின், ஜூலைக்குள் தேர்தல் நடத்துவதாக, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் எச்.ஜி.ரமேஷ், சதீஷ்குமார் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ்.பாரதி சார்பில், மூத்த வழக்கறிஞர், வில்சன் வாதாடியதாவது: உள்ளாட்சி தேர்தல், மே, 14க்குள் நடத்தப்படும் என, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. அதன்பின், ஜூலைக்குள் தேர்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதாக, தேர்தல் ஆணைய செயலர் மனு தாக்கல் செய்தார்.
இந்த கால அட்டவணையை கடைப்பிடிப்பதாக, மாநில தேர்தல் ஆணையர் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும். மேற்கொண்டு, தேர்தலை தள்ளிவைக்கும்படி கோர மாட்டோம் எனவும், உத்தரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து, ”தேர்தல் நடத்துவதில், உங்களுக்கு என்ன பிரச்னை; எதற்காக கால அவகாசத்தை நீட்டிக்கும்படி தொடர்ந்து கோரப்படுகிறது,” என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் வரும் ஜூலைக்குள் தேர்தல் நடத்துவது குறித்து, பிரமாண மனுவை தாக்கல் செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, 24க்கு தள்ளிவைத்தனர்.