டி20 சூரப்புலி கிறிஸ் கெய்ல்: 10,000 ரன்களைக் கடந்து உலக சாதனை
ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு வீரர் கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் 5 பவுண்டரிகள் 7 சிக்சர்களை விளாசி 77 ரன்கள் எடுத்தார், இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார்.
ஆர்சிபி அணி கெய்லின் அதிரடியுடன் விராட் கோலியின் 64 ரன்கள், டிராவிஸ் ஹெட்டின் 30 ரன்கள் மற்றும் கேதர் ஜாதவ்வின் 38 ரன்களுடன் 20 ஒவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவிக்க குஜராத் லயன்ஸ் அணியில் பிரெண்டன் மெக்கல்லம் ஆவேசமாக ஆடி 44 பந்துகளில் 2 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து ஒரு கட்டத்தில் 9.3 ஓவர்களில் 103/2 என்ற நிலையில் வெற்றி வாய்ப்புடன் மிளிர்ந்தது, ஆனால் லெக்ஸ்பின்னர் சாஹல் அருமையாக வீசி மெக்கல்லம், டிவைன் ஸ்மித், ரெய்னா ஆகிய முக்கிய வீரர்களை வெளியேற்றியதால் குஜராத் லயன்ஸ் போராடி 192 ரன்கள் வரை வந்து முயற்சியை கைவிட்டது.
இந்தப் போட்டியில் கெய்ல் 10,000 ரன்களைக் கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். டி20 ஜெயண்ட் கிறிஸ் கெய்ல் என்றால் அது மிகையாகாது.
இதுவரை 290 டி20 போட்டிகளில் 10,74 ரன்களை 40.62 என்ற சராசரியுடன் 149.51 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 18 சதங்களுடன் எடுத்துள்ளார் கிறிஸ் கெய்ல் 743 சிக்சர்களை விளாசியுள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் பிரெண்டன் மெக்கல்லம் 272 போட்டிகளில் 7596 ரன்களுடன் உள்ளார். மெக்கல்லத்தின் ஸ்ட்ரைக் ரேட் 138.31, 7 சதங்கள், 459 சிக்சர்கள். 7 சதங்கள். இவருக்கு அடுத்த இடத்தில் பிராட் ஹாட்ஜ், அடுத்த இடத்தில் பொலார்ட், அடுத்த இடத்தில் டேவிட் வார்னர் உள்ளனர். 8-ம் இடத்தில் விராட் கோலி இருக்கிறார். 9-ம் இடத்தில் ரெய்னா, 10-ம் இடத்தில் இங்கிலாந்து வீரர் லூக் ரைட்.
கிறிஸ் கெய்ல் எடுத்த 10074 டி20 ரன்களில் 74.8% ரன்கள் பவுண்டரிகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 769 பவுண்டரிகள், 743 சிக்சர்கள். இவருக்கு அடுத்த இடத்தில் விரேந்திர சேவாக் தனது 4061 டி20 ரன்களில் 69.7% ரன்களை பவுண்டரியில் அடித்துள்ளார்.
கெய்ல் டி20 கிரிக்கெட்டில் 18 வெவ்வேறு அணிகளில் ஆடியுள்ளார்.