தமிழகத்தில் ‘எந்திரன்’ பட வசூல் சாதனையை முறியடிக்குமா ‘பாகுபலி 2’?
தமிழக திரையரங்க உரிமையில் ‘எந்திரன்’ படத்தின் வசூல் சாதனையை கண்டிப்பாக ‘பாகுபலி 2’ முறியடிக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
‘பாகுபலி’ படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘பாகுபலி 2’க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’-ல் விடை தெரியவிருக்கிறது.
மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தெலுங்கில் நடைபெற்ற தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ‘பாகுபலி’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘பாகுபலி 2’ உரிமையை கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றினாலும், அவர்களிடமிருந்து வெளியீட்டு உரிமையை ஸ்ரீக்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் கண்டிப்பாக ‘எந்திரன்’ படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று முன்னணி விநியோகஸ்தர் தெரிவித்தார். இது குறித்து “’எந்திரன்’ படத்தின் வசூலில் திரையரங்கத்துக்கான பங்கு போக தயாரிப்பாளருக்கு சுமார் 50 கோடி ரூபாய் கிடைத்தது. தமிழக திரையரங்க உரிமை வசூலில் இச்சாதனையை இன்னும் எந்ததொரு படமும் தாண்டவில்லை. இதனை ’பாகுபலி 2’ கண்டிப்பாக தாண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழக மக்களிடையே இப்படம் கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மேலும், திரையரங்க உரிமையாளர்களும் ஏப்ரல் 28ம் தேதி ’பாகுபலி 2’க்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். ஏப்ரல் 28ம் தேதியிலிருந்து மே 12ம் தேதி வரை வேறு எந்ததொரு படமும் வெளியீட்டை உறுதிப்படுத்தவில்லை. ஆகையால் சுமார் 2 வாரங்கள் இடைவெளியிருப்பதால் கண்டிப்பாக ’எந்திரன்’ சாதனை முறியடிக்கும் என்று நம்பலாம்” என்று தெரிவித்தார்.