இந்தூரில் இன்று இரவு பலப்பரீட்சை: மும்பையின் வெற்றிக்கு தடைபோடுமா பஞ்சாப்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
மும்பை இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய போதும் அடுத்தடுத்து 4 வெற்றிகளை குவித்து பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. அந்த அணி 5 ஆட்டத்தில் விளையாடி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் முதல் இரு ஆட்டங்களிலும் அதிரடி வெற்றிகளை சேர்த்த பஞ்சாப் அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை பெற்று துவண்டு போய் உள்ளது.
மும்பையின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுப்பெறாத நிலையில் நடுக்களம் மற்றும் பின்கள வரிசை வீரர்கள் அதிரடியாக விளையாடி வெற்றி தேடிக்கொடுப்பவர்களாக உள்ளனர். 4 ஆட்டங்களிலும் சோபிக்க தவறிய கேப்டன் ரோஹித் சர்மா, குஜராத் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 29 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இது அவரது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.
பொலார்டு கடந்த இரு ஆட்டங் களாகவே சிறப்பாக பேட் செய்து வருகிறார். இளம் வீரரான நிதிஷ் ராணா இந்த சீசனில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 5 ஆட்டத்தில், இரு அரை சதங்களுடன் 193 ரன்கள் சேர்த்துள்ள அவரிடம் இருந்து மீண்டும் சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.
மும்பை அணியின் மிகப்பெரிய பலமாக பாண்டியா சகோதரர்கள் திகழ்கின்றனர். ஹர்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இன்றைய ஆட்டத்திலும் மும்பை பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும்.
பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் தனது அனுபவத்தால் பவர்பிளேவில் சிறப்பாக ரன் குவிப்பை கட்டுப்படுத் துகிறார். வேகப்பந்து வீச்சில் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா, மெக்லீனகன் பலம் சேர்க்கின்றனர். பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் பலமாக உள்ள மும்பை அணி தனது வெற்றியை தொடர செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும்.
தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ள பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கான வழியை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிரடி வீரர்களான மேஸ்வெல், டேவிட் மில்லர், மோர்கன் ஆகியோர் கடந்த 3 ஆட்டங்களில் பெரிய அளவில் ரன் குவிக்க தவறினர்.
தொடக்க வீரரான ஹசிம் ஆம்லாவும் எதிர்பார்த்த அளவு ரன் சேர்க்காதது பின்னடைவாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மனன் வோரா 50 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார்.
கடைசி கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக விளையாட பேட்ஸ்மேன்கள் இல்லாததால் அந்த ஆட்டத்தில் வெற்றியை நெருங்கிய போதும் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய நேரிட்டது. இதனால் இந்த விஷயத் தில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பந்து வீச்சில் மோகித் சர்மா, இஷாந்த் சர்மா, அக் ஷர் படேல் ஆகியோர் ஒருசேர சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம்.