டெல்லியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கமே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கிறிஸ் மோரிஸ் வீசிய 2-வது ஓவரின் 5-வது பந்தில் வார்னர் (4) ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிகர் தவணுடன் இணைந்த வில்லியம்சன் நிதானமாக விளையாடினார். பவர்பிளேவில் 39 ரன்கள் சேர்க்கப்பட்டது. மேத்யூஸ் வீசிய 7-வது ஓவரின் கடைசி இரு பந்துகளை வில்லியம்சன் சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.
சிறப்பாக விளையாடிய அவர் 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவரது அதிரடியால் ஹைதராபாத் அணி 11.3-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. மிஸ்ரா வீசிய 14-வது ஓவரில் வில்லியம்சன் 2 சிக்ஸர்கள் விளாச அந்த ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டது. நிதானமாக விளையாடிய ஷிகர் தவண் 40 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார்.
வில்லியம்சன் 51 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசிய நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 136 ரன்கள் சேர்த்தது. இதன் பிறகு ஷிகர் தவண் அதிரடியாக விளையாடினார். அவர் 50 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதே ஓவரின் அடுத்த பந்தில் யுவராஜ் சிங்(3) வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஹென்ரிக்ஸ் 12, தீபக் ஹூடா 9 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து 192 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி பேட் செய்தது. சேம் பில்லிங்ஸ் 13, கருண் நாயர் 33, ரிஷப் பந்த் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் வெளியேறினார். கடைசி 6 ஓவரில் வெற்றிக்கு 81 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் போராடினார்.
ரஷித் கான் வீசிய 15-வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் 2 சிக்ஸர்கள் விளாச அந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது.
ஒருமுனையில் ஸ்ரேயஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுமுனையில் மேத்யூஸ் பந்துகளுக்கு நிகராகவே ரன் சேர்த்தார். இதனால் வெற்றிக்கான ரன்விகித தேவை அதிகரித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் ஸ்ரேயஸ் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் மேத்யூஸ் சிக்ஸர் அடித்தார். ஆனால் 3 மற்றும் 4-வது பந்தை வீணடித்த அவர் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.
முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயஸ் ஐயர் 31 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் முகமது சிராஜ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.