தம்பியின் சடலத்தை சைக்கிளில் கொண்டு சென்ற அன்ணன்
அசாமில் இறந்து போன தனது 18 வயது இளைய சகோதரன் சடலத்தை வீட்டிற்கு சைக்கிளில் கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது. இதன் வீடியோ காட்சி வெளியானதையடுத்து விசாரணைக்கு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வரின் சட்டசபை தொகுதியான லக்கிம்பூர் மாவட்டம்,மஜவுலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சைக்கிளில் சடலம் ஒன்றை கொண்டு செல்லும் வீடியோ காட்சி வெளியானது. உள்ளூர் டி.வி. சானல் ஒன்று அந்த வீடியோவை ஒளிபரப்பியுள்ளது. விசாரணையில் டிம்பிள் தாஸ் என்ற 18 வயது சிறுவன் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்ததால், உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல அவரது மூத்த சகோதரன் தம்பியின் உடலை துணியில் கட்டி சைக்கிளில், குண்டு குழியுமாக உள்ள சாலை வழியாகவும், ஆற்றின் குறுக்கே உள்ள மரப்பாலத்தை சடலத்துடன் கடந்து சென்ற காட்சி வீடியோவில் இருந்தது.
மஜவுலி பகுதியில் எந்தவித சாலை போக்குவரத்து வசதியும் ,வளர்ச்சியும் அடையாத பகுதி என்பதாலும் அங்கு ஆம்புலன்ஸ் வரும் அளவிற்கு சாலைவசதி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் காரணம் கூறியதாக கூறப்படுகிறது. இத்தொகுதியில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் சர்பானந்தா சோனோவால் தாம் வெற்றி பெற்றால் மஜவுலி தொகுதிக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார் ஆனால் சொன்னபடி செய்ய வில்லை என தொகுதி மக்கள் கூறினர். வீடியோ காட்சி வெளியானதையடுத்து முதல்வர் சோனோவால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.