பத்மஸ்ரீ விருதை அங்கீகாரமாக கருதுகிறேன்: மாரியப்பன் பெருமிதம்
‘எனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை மாற்றுதிறனாளி வீரர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்’ என்று பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் கூறினார்.
கடந்தாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்க பதக்கம் வென்றார். இதையடுத்து சமீபத் தில் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீவிருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்றதற்காக தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்கம் சார்பில் மாரியப்பனுக்கு பாராட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாரியப்பன் பேசுகையில், “எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது மாற்றுதிறனாளி வீரர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். நம் நாட்டில் என்னை போன்று பல மாற்றுதிறனாளி வீரர்கள் சாதிப்பதற்காக காத்திருக் கிறார்கள். மத்திய அரசும் விளை யாட்டு சங்கங்களும் அவர்களுக்கு போதிய உதவிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்’’ என்றார்.
பயிற்சியாளர் சத்தியநாரா யணா பேசுகையில், “பாராலிம் பிக்கில் தங்கம் வென்றதன் மூலம் மாரியப்பன் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார். அவர் 2020-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டிக் காக பயிற்சிகள் எடுத்து வருகிறார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு துறைகளில் ‘கிளாஸ் ஒன்’ பிரிவில் அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுதொடர்பாக நாளை (இன்று) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார்.
விழாவில் தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்க சேர்மன் நாக ராஜன், தலைவர் திலீப் ராஜ், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்த குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மாரியப்பனை பாராட்டி பேசினர்.