வறண்ட காற்றிலிருந்தும் குடிநீர்: விஞ்ஞானிகள் சாதனை
பாலைவனங்கள் உள்ளிட்ட வறண்ட பிரதேசங்களில் வீசும் வறட்சி காற்றில் இருந்தும் குறைந்த செலவில் குடிநீர் தயாரிக்க முடியும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் மசாசூசெட்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் இணைந்து சூரிய சக்தியில் இயங்கும்வகையிலான கருவியை வடிவமைத்துள்ளனர். இதுதொடர்பான ஆய்வு அறிக்கை, “சயின்ஸ்” ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனம் தொடர்பாக மூத்த விஞ்ஞானி எவ்லின் வாங் கூறியதாவது, வளிமண்டல ஈரப்பதத்திலிருந்து குடிநீர் தயாரிக்கும் முறைகள் இருந்தபோதிலும், தங்களுடைய கண்டுபிடிப்பு, குறைந்த பொருட்செலவில் வறண்ட காற்றிலிருந்தும் குடிநீர் தயாரிக்கவல்லது.
மெட்டல் ஆர்கானிக் கட்டமைப்புடன் கூடிய தங்கள் கருவியில், ஒருசமயத்தில் 2.8 லிட்டர் குடிநீர் தயாரிக்க இயலும். திறந்தவெளியில் திறந்தநிலையில் தங்களது கருவியை வைத்தால், அதிலுள்ள ஸ்பாஞ்ச் போன்ற அமைப்பானது வறண்ட காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சுகிறது. பின் கருவியை மூடிவைத்தால், ஈரத்தன்மையானது, நீராவியாக மாறி மேற்புறத்தில் சேகரமாகிறது. அதிலுள்ள குளிர்விப்பானின் உதவியுடன் நீராவியாக, திரவநிலையாக மாற்றப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது.
அதிக வெப்பநிலை நிலவும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தங்களது கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக விளங்கும்.
மற்ற கண்டுபிடிப்புகள், 50 சதவீத ஈரப்பதம் உள்ளநிலையில் மட்டும் இயங்கும்நிலையில், தங்களது கண்டுபிடிப்பு 20 சதவீதத்திற்கும் குறைவான ஈரப்பதம் உள்ள காற்றையும் பயன்படுத்தி குடிநீரை தயாரிக்கும் என்று அவர் பெருமைபொங்க கூறினார்…