கோவையில் அசத்தும் தாய்ப்பால் வங்கி : பச்சிளங் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம்!
கோவை அரசு மருத்துவமனையில் செயல்படும், தாய்ப்பால் வங்கியால் பயன்பெறும் பச்சிளங் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பச்சிளங்குழந்தை கள் பலரின் உயிரை காப்பதில், இந்த தாய்ப்பால் வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழகத்தில், கோவை உட்பட ஏழு மாவட்ட அரசு மருத்துவமனைகளில், தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கோவையில், 2015 செப்டம்பரில் துவங்கப்பட்ட தாய்ப்பால் வங்கி திட்டம், இன்று பல தளிர்களின் உயிர்களை காப்பாற்றும் மகத்தான திட்டமாக மாறியுள்ளது.
இயற்கை உணவு : கோவையில் இந்த திட்டத்தை துவங்கியபோது, 138 தாய்மார்கள் பாலை தானமாக வழங்கினர். இதனால், 46 குழந்தைகள் பயன் பெற்றன. இந்த எண்ணிக்கை அதிகரித்து, இந்தாண்டு, மார்ச் நிலவரப்படி, 1,265 தாய்மார்கள் பால் வழங்கியுள்ளனர்; 1,135 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.
அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் பூமா கூறியதாவது: தாய்ப்பால் போல், ஒரு பச்சிளங் குழந்தைக்கு சிறந்த இயற்கை உணவு, வேறில்லை. உடலின் சமச்சீரான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய்ப்பால் தான் சிறந்தது. தாய்ப்பாலில் உள்ள, ‘இம்யூனோகுளோ புலின்’ எனும் புரதம், நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. ஆனால், சர்க்கரை நோய், புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட தாய்மார்களால், உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாது.
பிரசவத்தில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் சில தாய்மார்களாலும், உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாது. இது போன்ற தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளும், தாய்ப்பாலினால் கிடைக்கும் நன்மைகளை பெற வேண்டும் என்பதற்காகவே, ‘தாய்ப்பால் வங்கி’ திட்டம் துவங்கப் பட்டது. தாய்மார்களிடம் சேகரிக்கப்படும் பால், முதலில் சூடாக்கப்படுகிறது. பின், தகுந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்ப நிலையில், ‘ப்ரீசரில்’ பாதுகாக்கப்படுகிறது. இந்த பாலை, ஆறு மாதங்கள் வரை கூட, கெடாமல் வைத்திருக்க முடியும்.
10 முறை ஊட்டுகிறோம் :
பிற குழந்தைகளை விட, சில தாய்மார்களால் விட்டுச் செல்லப்படும் ஆதரவற்ற குழந்தை களுக்கு, ஒரு நிஜ தாய் ஆகவே இந்த திட்டம் உள்ளது. அதே போல், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும், இந்த பால் சிறந்த ஊட்டச்சத்து ஆக உள்ளது. பகலில் ஏழு முறையும், இரவில் மூன்று முறையும் என, ஒரு நாளைக்கு, 10 முறை பச்சிளங்குழந்தைகளுக்கு சங்கு அல்லது டியூப் மூலம் பாலுாட்டுகிறோம்.
தற்போது, மருத்துவமனையில், 90 பச்சிளங் குழந்தைகள் உள்ளனர். 50 குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது. மீதமுள்ள, 30 குழந்தைகளும் தாய்ப்பால் வங்கியை தான் நம்பி வளர்கின்றன. பெற்றோரால் விட்டுச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் பராமரிக்கப் படும் பச்சிளங் குழந்தைகளுக்கு, இது பெரிய பரிசு. பால் தானம் வழங்க விரும்பும், ஆரோக்கிய மான எந்த தாயும், மருத்துவமனையை அணுகி பால் வழங்கலாம். இவ்வாறு, டாக்டர் பூமா கூறினார்.