நீங்கள் வர்த்தக நிறுவனம் நடத்தவில்லை; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு
‛‛நீங்கள் பள்ளிகளை நடத்துகிறீர்கள் வர்த்தக நிறுவனங்களை அல்ல” என பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு வைத்துள்ளது.
இந்தியா முழுவதும் சுமார் 20 ஆயிரம் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.இ.ஆர்.டி.,யின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை, காலணிகள் உள்ளிட்டவற்றை பள்ளி வளாகத்தில் உள்ள கடைகளிலோ அல்லது வெளியில் உள்ள குறிப்பிட்ட கடைகளிலோ தான் வாங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்துவதாக சி.பி.எஸ்.இ., புகார்கள் குவிந்தது.
எச்சரிக்கை
இதையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை அறிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் ‛‛சி.பி.எஸ்.இ.,யின் கீழ் இயங்கும் பள்ளிகள் சமூக முன்னேற்றத்திற்கான சேவையின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும் எனவும், அதை வைத்து வர்த்தகம் செய்ய கூடாது என்ற விதிமுறை உள்ளது.
ஆனால் பல பள்ளிகளில் மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகளை பள்ளி வளாகத்தில் இயங்கும் கடைகளிலோ, வெளியில் இயங்கும் குறிப்பிட்ட கடைகளிலோ வாங்க பெற்றோரை பள்ளி நிர்வாகம் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை பள்ளி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., அங்கிகாரத்தை இழக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக இதற்கு முன்னரும் பல முறை சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை விடுத்தும் பள்ளிகளில் இந்த முறை தொடர்ந்து வருவதாகவும், இந்த முறைதான் அங்கிகாரம் ரத்து செய்யப்படும் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.