Breaking News
50 லட்சம் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு ‘ரெடி’

தமிழகத்தில் இதுவரை, 50 லட்சம், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் தயாராகி உள்ளன.

தமிழகத்தில், காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி, ஏப்ரல், 1ல் துவங்கியது. சென்னை, ஆர்.கே.நகரில், 12ல் இடைத்தேர்தல் நடக்க இருந்ததால், தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தது. இதனால், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வந்தது. நேற்று வரை, 50 லட்சம் கார்டுகள் அச்சிடப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு, சப்ளை செய்யப்பட்டுள்ளன. அதில், 11 லட்சம் கார்டுகள், மக்களுக்கு வழங்கப்பட்டன.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டு வாங்கிய பலர், அதில் பிழை இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு, ‘ஆதார்’ கார்டில் உள்ள பிழையே காரணம். எனவே, பிழையில்லாமல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட இருக்கிறது. இதனால், ரேஷன் கார்டுதாரர்கள், ஸ்மார்ட் கார்டு வாங்குவதற்கு முன், www.tnpds.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று, தங்கள் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து விபரமும் சரியாக இருந்தால், அந்த கார்டு அச்சாகி இருக்கும். அதன் விபரமும், அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். விபரங்கள் சரியில்லாமல் இருப்பவர்கள், அதை சரி செய்ததும், கார்டு அச்சுக்கு அனுப்பப்படும். எனவே, இணையதளத்துக்கு சென்று, அந்த விபரங்களை அனைவரும் சரிபார்த்து கொள்ள வேண்டும், என்றார்

சென்னையில் இன்று துவக்கம்: சென்னையில், 20.10 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், எட்டு லட்சம் கார்டுதாரர்கள் மட்டுமே, அனைத்து உறுப்பினர்களின், ‘ஆதார்’ விபரங்களையும் வழங்கியுள்ளனர். 12 லட்சம் கார்டுதாரர்கள், ஒன்று அல்லது இரண்டு பேரின் ஆதார் விபரங்களை வழங்கிஉள்ளனர். சென்னையில், முழு ஆதார் விபரமும் வழங்கியவர்களுக்கு, இன்று முதல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட இருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.