உ.பி. சட்டப்பேரவையின்கூட்டம் நேரடி ஒளிபரப்பு : சபாநாயகர் தகவல்
சேலம் மாவட்டம் புதுச்சாம்பள்ளியில், மேட்டூர் – சேலம் சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, ஊருக்குள் இடமாற்றம் செய்யப்பட்டது. அங்குள்ள குருவாகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட கடையில், நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு குடிமகன்கள் தாறுமாறாக வாகனங்களை ஓட்டிச்சென்றனர். இதில், பைக் மோதியதில் 3 வயது பெண் குழந்தை படுகாயமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், மதுக்கடையை அப்புறப்படுத்தக்கோரி, சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடம் தாசில்தார் மற்றும் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில், கலைந்து சென்றனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து, டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் கலையரசன் கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதில், கும்பலாக வந்து தாக்கியதில் கடையின் ஜன்னல் கண்ணாடி உடைந்து, மதுபாட்டில்கள் சேதமடைந்தது. அப்போது, சிலர் பெட்ரோல் குண்டுவீசுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்பேரில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், சட்ட விரோதமாக கூட்டமாக சென்று கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சரவணன், ஜெயகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், 50 பேரை தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘’வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் கல்லூரி மாணவ, மாணவிகள். சம்பவத்தின்போது ஊரில் இல்லாதவர்களின் பெயர்களையும் போலீசார் வழக்கில் சேர்த்துள்ளனர். மக்கள் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுகொள்ளாத போலீசார், ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். எனவே, எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம். ஆளுங்கட்சியினர் போட்டியிடக்கூடிய இடங்களில் பெண்களை நிறுத்துவதற்காக மனுதாக்கல் செய்வோம் என்றனர். இந்த பிரச்னையால் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.
மனித சங்கிலி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கோழிகுடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆறுகுடிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோழிகுடிப்பட்டி, ஆறுகுடிப்பட்டி, மு.சூரக்குடி, எம்.வையாபுரிபட்டி எஸ்.கோவில்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறுகுடிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர். தகவலறிந்து எஸ்.வி.மங்கலம் போலீசார் மற்றும் எஸ்.எஸ்.கோட்டை வருவாய் அலுவலர் பூங்கோதை உள்ளிட்டோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடை வைக்க அனுமதிக்கப்படாது என்று அவர்கள் கூறியதையடுத்து மனிதச்சங்கிலியில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.