டெல்லியில் மாநகராட்சி தேர்தல் மீண்டும் பா.ஜ.வுக்கு சாதகம்?
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் 54 சதவீத் வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பலத்த பாதுகாப்புக்கிடையே டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு மாநகராட்சிகளின் 270 வார்டுகளிலும் நேற்று காலை 8.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. வாக்குபதிவு முடியும் நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள், நேரம் முடிந்த பிறகும் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். வடக்கு, கிழக்கு மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் இருவர் இறந்ததால் அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. வார்டுகள் மறுசீரமைத்த பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மாநில தேர்தல் ஆணையர் வஸ்தவா கூறியதாவது: வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. காலை 10.00 மணி வரை 1.16% என மந்தமாக இருந்த வாக்குப்பதிவு அதற்குப் பின் சூடுபிடித்து மாலை 4.00 மணி அளவில் 45 சதவீதத்தை எட்டியது.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு பதிவான அதே 54 சதவீதம் இப்போதும் பதிவாகி உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் நடைபெறும். அதே தினம் மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும். இவ்வாறு வஸ்தவா கூறினார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பயன்படுத்தி இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என மாநில தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்து இருந்தாலும், பல பூத்களில் இவிஎம் கோளாறு ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது. துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் முதல் ஆளாக வந்திருந்து காலையிலேயே வாக்களித்துச் சென்றனர். கெஜ்ரிவால் தனது பெற்றோர், மனைவி, மகள் ஹர்ஷிதா ஆகியோருடன் வந்திருந்தார். ஹர்ஷிதா ஓட்டு போடுவது இதுவே முதல் முறையாகும். கருத்து கணிப்பு: இதற் கிடையே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில் பாஜ முதலிடத்தை யும், ஆம் ஆத்மி 2வது இடத்தையும் பிடிக்கும் என்று தெரியவநதுள்ளது.