பாஸ்போர்ட் பெற இந்தியிலும் விண்ணப்பிக்கலாம்
இனி ஆன்லைனில் பாஸ்போர்ட் வேண்டி இந்தியில் விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்ற குழு இந்தி பயன்பாடு தொடர்பாக தனது பரிந்துரைகளை தாக்கல் செய்தது. அதில், அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இரு மொழிகளில் விண்ணப்பம் இருக்க வேண்டும். இந்தி மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி இருந்தது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து, ஆன்லைனில் பாஸ்போர்ட் வேண்டி இந்தியில் விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்கும் போது, இந்தியில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து அப்லோடு செய்ய வேண்டும். மேலும், பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான தகவல்களும் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்தி மொழியில் இருக்கும் என்றும், பாஸ்போர்ட்டில் இந்தியில் பெயர், விவரம் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.