முதல்–மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்
புதிய இந்தியாவை உருவாக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்–மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
நிதி ஆயோக் கூட்டம்
முன்பிருந்த திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக ‘நிதி ஆயோக்’ கவுன்சிலை மத்திய அரசு அமைத்துள்ளது. இதன் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக அனைத்து மாநில முதல்–மந்திரிகளும் உள்ளனர். இந்தநிலையில் மாநில முதல்–மந்திரிகள் கலந்து கொண்ட நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது நாட்டின் 15 ஆண்டு பொருளாதாரத்தின் மீதான தொலை நோக்கு பார்வை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:–
ஒத்துழைக்க வேண்டும்
நிதி ஆயோக் 15 ஆண்டு கால தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. இதில் 7 ஆண்டுகள் நடுத்தர யுக்திகளை கொண்டது. 3 ஆண்டுகள் வளர்ச்சியை துரிதப்படுத்துவதாக அமையும். புதிய இந்தியாவை அமைக்கும் லட்சியம் கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும். எனவே இதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உலகின் போக்கிற்கு ஏற்ப நாட்டை தயார்படுத்துவதற்கான வழிமுறைகளை இங்கே கூடி இருக்கும் இந்திய குழு எதிரொலிக்கும். நாட்டின் 75–வது சுதந்திர தின வருடமான 2022–ம் ஆண்டுக்குள் நாட்டை விரைவான வளர்ச்சிப் பாதைக்கு முன்னெடுத்து செல்ல வேண்டும்.
அடிப்படை கட்டமைப்புகளான சாலைகள், துறைமுகம், மின்சக்தி, ரெயில்வே ஆகிய துறைகளில் வளர்ச்சி இல்லாதது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறது. எனவே கட்டமைப்பு வளர்ச்சியை மாநில அரசுகள் முடுக்கிவிட வேண்டும். இதற்காக மூலதன செலவினங்களை வேகப்படுத்தி கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.
வேளாண்துறை ஊக்கம் பெறும்
முன்பெல்லாம் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுக்கு மே மாதம் வரை பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காது. அதன்பிறகே சம்பந்தப்பட்ட அரசுகளையும், அமைச்சகங்களையும் தொடர்பு கொள்வார்கள். அதற்குள் பருவமழை காலம் வந்துவிடும். இதனால் நிதி ஒதுக்கீடு தாமதமாகி அதை பயன்படுத்துவதற்கான தருணம் முடிந்து வேளாண் சாகுபடி பாதிப்படைந்து விடும்.
தற்போது மத்திய அரசு பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்து இருப்பதால் நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்து அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் சாதகமான நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் வேளாண்துறை மிகுந்த ஊக்கம் பெறும்.
கூட்டாட்சி தத்துவம்
சரக்கு சேவை வரி விதிப்பில் மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதில் ஒரு மித்த கருத்து ஏற்பட்டு இருப்பது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு சான்றாக அமைந்து இருக்கிறது. இது ஒரே தேசம், ஒரே விருப்பம், ஒரே உறுதிப்பாடு என்னும் உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதில் அரசியல் கருத்து வேறுபாடுகள், மாற்று சிந்தனைகளை மறந்து அனைத்து மாநில முதல்–மந்திரிகளும் ஒரே மேடைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜூலை 1–ந்தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் சட்டரீதியான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசுகள் தாமதம் இன்றி செய்யவேண்டும்.
‘பீம்’ செயலி தொழில்நுட்பம் மற்றும் ஆதார் எண் பயன்பாடு மாநில அரசுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் சேமிப்பை கொடுத்து இருக்கிறது.
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த விவாதங்களை அனைத்து மாநில அரசுகளும் முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மம்தா, கெஜ்ரிவால் புறக்கணிப்பு
கூட்டத்தில் பா.ஜனதா ஆளும் மாநில முதல்–மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்–மந்திரிகள் அமரிந்தர் சிங்(பஞ்சாப்), நிதிஷ்குமார்(பீகார்), மாணிக் சர்க்கார்(திரிபுரா), சித்தராமைய்யா(கர்நாடகா), எடப்பாடி பழனிசாமி(தமிழ்நாடு), நவீன் பட்நாயக்(ஒடிசா) ஆகியோர் பங்கேற்றனர்.
மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சுரேஷ் பிரபு, பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிரிதி இரானி, ராவ் இந்திரஜித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதல்–மந்திரிகள் மம்தா பானர்ஜி(மேற்கு வங்காளம்), கெஜ்ரிவால்(டெல்லி), முகுல் சங்மா(மேகாலயா) ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இவர்கள் தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்து இருந்தனர்.