விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழு அடைப்பு- வாகன போக்குவரத்து முடக்கம்! போலீஸ் குவிப்பு!!
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. ஆனால் அரசு பேருந்துகள் கணிசமான அளவில் இயக்கப்படுகின்றன.
வறட்சி நிவாரண தொகை அதிகரிப்பு, தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை
இதனிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதிமுக, பாஜக, தமாகா, பாமக தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள், வர்த்தகர் சங்கங்கள், ஓட்டல்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.
கடைகள் மூடல்
இன்று காலை 6 மணி முதல் இந்த முழு அடைப்புப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நகரங்களிலும் கிராமங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
காய்கறி சந்தைகள் மூடல்
சென்னை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டன. கோயம்பேடு மற்றும் ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கான காய்கறி வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகள் இயக்கம்
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் கணிசமான அளவில் இயக்கப்படுகின்றன. மேலும் ரயில் போக்குவரத்திலும் எந்த பாதிப்பும் இல்லை. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.
போலீஸ் குவிப்பு
இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.,