4 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அனல் காற்று வீசுவதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெயில் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. வெயில் மற்றும் வெப்பம் காரணமாக சிவகங்கை, திண்டுக்கல், வாடிப்பட்டி உள்ளிட்ட உள் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதனால் அந்த பகுதியில் சற்று வெப்பம் தணிந்துள்ளது.
கடந்த வாரம் முதல் தெற்கு ஆந்திராவில் அனல் காற்று வீசிவருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் சில இடங்களில் நேற்றும் அனல்காற்று வீசியது. அதிகபட்சமாக திருத்தணி, வேலூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது.
இன்றும் திருத்தணியில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூரில் 110 டிகிரி கொளுத்தியது. திருச்சியில் 108 டிகிரியும், மதுரை, கரூர் மாவட்டங்களில் 106 டிகிரியும், திருப்பத்தூரில் 104 டிகிரியும், சென்னை, தர்மபுரி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 102 டிகிரியும், வெயில் கொளுத்தியது. தெற்கு ஆந்திராவில் அனல் காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் வடமேற்கு மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, கிருஷ்ணிகிரி, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும். அதனால் அந்த மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். வெயில் மற்றும் வெப்ப காற்று வீசுவது மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.