ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஸ்ஷிப்: கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் வேலவன்
ஆசிய தனிநபர் சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
19-வது ஆசிய தனிநபர் சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஆடவர் பிரிவில் சவுரவ் கோஸல், வேலவன் செந்தில் குமார், விக்ரம் மல்கோத்ரா, மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சாந்து, ஆதித்யா ஜகதாப் ஆகியோரும் மகளிர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சச்சிகா இங்கலே, சுனைனா குருவிலா, ஊர்வசி ஜோசி, லக் ஷயா ஆகியோரும் பங்கேற்றுள்ளளனர்.
ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தி குமார் 11-1, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் ஈரானை சேர்ந்த சோகைல் சாமெலியை வீழ்த்தினார். 2-வது சுற்றில் வேலவன், பாகிஸ்தானை சேர்ந்த பர்கான் ஸமானுடன் மோதுவதாக போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ளாததால் 2-வது சுற்றில் வேலவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்றொரு இந்திய வீரரான ஹரிந்தர் பால் சாந்து தனது முதல் சுற்றில் 11-1, 11-5, 11-4 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரேமார்க்கை வீழ்த்தினார். அதேவேளையில் ஆதித்யா 5-11, 6-11, 8-11 என்ற செட் கணக்கில் மலேசியாவின் நபிஸ்வானிடம் தோல்வியடைந்தார்.
முதல் நிலை வீரான ஹாங் காங்கின் மேக்ஸ் லீ 11-8, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் ஈரானின் நவித் மலேக்சபெட்டை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீரரான இந்தியாவின் மகேஷ் மங்கோன்கர் 11-4 11-7 11-6 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரை சேர்ந்த விவியன் ரஹ்மானை தோற்கடித்தார்.
2-ம் நிலை வீரரான இந்தியாவின் சவுரவ் கோஷல் 11-2, 11-3,11-5 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரை சேர்ந்த பெனடிக்ட் ஷானையும், 10-ம் நிலை வீரரான விக்ரம் மல்கோத்ரா 11-7, 11-8, 15-13 என்ற செட் கணக்கில் ஈரானின் அலிரேசாவையும் வீழ்த்தினர். மகளிர் பிரிவில் இந்தியாவின் சுனைனா குருவிலா, 12-ம் நிலை வீராங்கனையான கொரியாவை சேர்ந்த சோ யுராவை 11-4 11-8 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
அதேவேளையில் மற்ற இந்திய வீராங்கனைகளான லக் ஷயா 11-7,4-11, 11-9, 6-11, 6-11 என்ற செட் கணக்கில் மலேசியாவின் யக் ஹனிடமும், சச்சிகா இங்கலே 7-11, 6-11, 11-7, 13-11, 11-13 என்ற கணக்கில் மலேசியாவின் அயிபா ஸமானிடமும் தோல்வியடைந் தனர். மற்றொரு ஆட்டத்தில் 16-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சடோமி 11-5, 12-10, 11-3 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஊர்வசி ஜோஷியை வீழ்த்தினார்.
இதற்கிடைய இந்த ஸ்குவாஷ் தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக உள்ள ஜியோ, இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களையும் ஜியோ டிவி செயலி மூலம் நேரடி ஒளிபரப்பாக காணலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆட்டங்களை ரெக்கார்டு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.