‘பாகுபலி 2’ அப்டேட்: தமிழக வெளியீட்டு பிரச்சினைகள் முடிவுக்கு வந்தது எப்படி?
‘பாகுபலி 2’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையில் நிலவி வந்த சிக்கல் ஒருவழியாக முடிக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துள்ளன.
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் ‘பாகுபலி 2’. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை(ஏப்ரல் 28) வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலுமே இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. டிக்கெட் முன்பதிவில் அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்கள், அனைத்து மொழிகளிலுமே விற்று தீர்ந்துள்ளன. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.
47 கோடிக்கு ராஜராஜனிடமிருந்து ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியீட்டு உரிமையை வாங்கியது. அதில் ஒரு பகுதி பணத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் ராஜராஜனிடம் வழங்கிவிட்டது. ஆனால், மீதமுள்ள தொகையை அவர்களால் வழங்க இயலவில்லை. ஏனென்றால் ‘வைரவா’, ‘போகன்’, ‘கட்டப்பாவ காணோம்’ ஆகிய படங்களில் ஏற்பட்ட நஷ்டம் தான் காரணம்.
மீதமுள்ள பணத்தை வழங்க முடியாததால், ராஜராஜன் மீண்டும் தன்னிடமே வெளியீட்டு உரிமையைக் கொடுத்துவிடுங்கள், நான் வெளியிட்டு கொள்கிறேன் என்று கேட்டார். ஆனால், ஸ்ரீக்ரீன் நிறுவனம் தங்களுடைய விநியோகஸ்தர்களிடம் முழுமையாக அனைத்து ஏரியாவையும் விற்றுவிட்டது. இரண்டு தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசிவந்தார்கள். இதனால் பேச்சுவார்த்தையில் கடும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஏரியாவாரியாக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள விநியோகஸ்தர்களிடமிருந்து மேலும் அதிகமாக பணத்தைப் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு பல விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, சிக்கல் நீடித்து வந்தது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோக உரிமையைக் கைப்பற்றிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தங்களுடைய உரிமையை திரும்ப ஒப்படைத்தது. இறுதிகட்டத்தில் திரும்ப ஒப்படைத்ததால், ஸ்ரீக்ரீன் நிறுவனம் திணறியது. ஒரு வழியாக சென்னை உரிமையை அபிராமி ராமநாதானும், செங்கல்பட்டு உரிமையை அருள்பதியும் கைப்பற்றினார்கள். இதர விநியோகஸ்தர்கள் கொஞ்சம் பணம் அதிகமாக கொடுக்க பிரச்சினை முடிவுக்கு வந்தது.
பிரச்சினை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. சில மணி நேரத்திலேயே பல திரையரங்குகளில் 4 நாட்களுக்கு அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.