அமெரிக்காவில் வரி குறைப்பு
தவியேற்று, 100 நாட்கள் நிறைவடைவதையொட்டி, தன் தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தபடி, வரி குறைப்பு அறிவிப்பை, நேற்று வெளியிட்டார். அதன்படி, தொழில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கான வரி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில், நிறுவனங்களுக்கு, தற்போது விதிக்கப்படும், 35 சதவீத கார்பரேட் வரி, 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதுபோலவே, தனி நபர் வருமான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அங்கு, தற்போது, ஏழு விகிதங்களில், வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது; இது, மூன்றாக மாற்றியமைக்கப்படுகிறது. வருமானத்தின் அளவை பொறுத்து, இனிமேல், 10 சதவீதம், 25 சதவீதம், 35 சதவீதம் என, மூன்று அளவுகளில் வருமான வரி வசூலிக்கப்படும். அதுபோலவே, சிறிய தொழில் செய்பவர்களுக்கும், மிக பெரும் தொழிலதிபர்களுக்கும் பல்வேறு வரிச் சலுகைகளையும், அவர் வாரி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: டிரம்பின் வரி குறைப்பு நடவடிக்கை, ஸ்தம்பித்துள்ள அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை அளிக்கும்; வரி ஏய்ப்பு பெருமளவு குறையும். பெரும் பணக்காரர்கள், தவறான கணக்கு காட்டி, வரியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள். புதிய தொழில் முனைவோர் பெருமளவு பயன் பெறுவர்.
வெளிநாட்டு நிறுவனங்களும், அமெரிக்காவில் தொழில் துவங்க ஆர்வம் காட்டும். கார்பரேட் வரி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், வசதி படைத்த பலர், தொழில் துவங்க முன் வருவர்; இதனால் வேலை வாய்ப்பும் பெருகும், என்றனர்.வரி குறைப்பை டிரம்ப் அறிவித்துள்ள போதிலும், இதற்கு, அந்நாட்டு பார்லிமென்ட்டின் ஒப்புதல் பெற வேண்டும். பணக்காரர்களுக்கு வரி குறைப்பு: அமெரிக்காவில் தற்போது அதிகபட்ச தனிநபர் வருமான வரி, 39.5 சதவீதம். ஆனால், டிரம்ப், அதிகபட்ச வரி அளவை, 35 சதவீதமாக குறைத்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்கள் செலுத்தும் வரியின் அளவு கணிசமாக குறையும். இதுகுறித்து, எதிர்கட்சியான ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கூறுகையில்,’நடுத்தர மக்களுக்கு, பெரிய அளவில் வரி குறைப்பு செய்யவில்லை. இதனால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பு தான் ஏற்படும்’ என்றனர்.