ஜூன் 15க்குள் ரூ.1,500 கோடி அல்லது சிறை
‘சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய், ஏற்கனவே கூறியபடி, முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகையில், 1,500 கோடி ரூபாயை, ஜூன், 15க்குள் செலுத்தாவிடில், மீண்டும் சிறை செல்ல நேரிடும்’ என, சுப்ரீம் கோர்ட் எச்சரித்து உள்ளது.
மோசடி:
முதலீட்டாளர்களிடம் வாங்கிய, 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை, திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக, சஹாரா குழும நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், 2014ல் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பரோலில் விடுதலை:
‘முதலீட்டாளர்களின் பணத்தை, கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப செலுத்துகிறேன்; வெளியே சென்று, பணத்தை திரட்ட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என, அவர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, 2016ல், அவரை, சுப்ரீம் கோர்ட், பரோலில் விடுவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
உத்தரவு:
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: சுப்ரதா ராய் கூறியபடி, முதல் தவணையான, 1,500 கோடி ரூபாயை, ஜூன், 15க்குள், பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான, ‘செபி’யில், ‘டிபாசிட்’ செய்ய வேண்டும்; தவறினால், மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
நீதிமன்ற அவமதிப்பு:
இந்த வழக்கில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சஹாரா நிறுவனத்திற்கு, சொந்தமாக உள்ள ஓட்டல் ஒன்றை வாங்கிக் கொள்வதாக, சென்னையைச் சேர்ந்த, பிரகாஷ் எம் சாமி, 10 கோடி ரூபாய் செலுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் கூறி இருந்தார். ஆனால், அதன்படி செலுத்தவில்லை. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு செய்ததால், அவருக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.