தமிழகத்தில் ‘பாகுபலி 2’ காலை காட்சிகள் ரத்து: வெளியீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரம்
தமிழகத்தில் ‘பாகுபலி 2’ படத்தின் காலை காட்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 11 மணி காட்சி தான் வெளியாகும் என தகவல்.
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் ‘பாகுபலி 2’. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் இன்று (ஏப்ரல் 28) வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் அதிகாலை காட்சிகள் தொடங்கப்பட்டு, அனைவருமே படம் பற்றிய கருத்துகளை தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள். அனைவருமே இயக்குநர் ராஜமெளலிக்கு பெரும் பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் காலை காட்சிகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 4:45 மணிக் காட்சி மற்றும் 8 மணிக் காட்சிக்கு வந்த ரசிகர்கள் அனைவருமே பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
ஏன் வெளியாகவில்லை என்பது குறித்து விசாரித்த போது, “தமிழக உரிமையைப் பெற்றிருக்கும் ராஜராஜன் இன்னும் ‘பாகுபலி 2’ தயாரிப்பு நிறுவனத்துக்கு முழுமையாக பணம் கொடுக்கவில்லை. ஆகையால் அவர்கள் இன்னும் NOC சான்றிதழ் வழங்கவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவுற்று படம் இன்று வெளியாகிவிடும். காலை 11 மணி காட்சி வெளியாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்கள்.
ஏற்கனவே இப்படத்தின் வெளியீட்டு பிரச்சினையில் நிலவி வந்த சிக்கலை, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு வந்தது. தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகியவற்றில் எந்தவொரு பிரச்சினையுமின்றி ‘பாகுபலி 2’ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது