உ.பி.,யில் பிரஜாபதிக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டு, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலில் பேரில் கைது செய்யப்பட்ட சமாஜ்வாதி கட்சி முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி, நேற்று ஜாமினில் வெளி வந்தார். இவருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றவாளிக்கு ஜாமின்
உ.பி.,ல் முன்னாள் முதல்வர் அகிலேஷ் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தவர் காய்த்ரி பிரஜாபதி. இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர் மார்ச் 15ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பாலியல் வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று கூறிய காயத்ரி பிரஜாபதி, ஜாமின் கேட்டு போக்சோ கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட், பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமினை ரத்து செய்யக்கோரி அரசு சார்பில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நேற்று விசாரித்த ஐகோர்ட், பிரஜாபதியின் ஜாமினுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. காயத்ரி பிரஜாபதிக்கு போக்சோ கோர்ட் ஜாமின் வழங்கினாலும், மற்ற இரண்டு வழக்குகளில் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சஸ்பெண்ட் :
இந்நிலையில், பிரஜாபதிக்கு ஜாமின் வழங்கிய போக்சோ கோர்ட் நீதிபதி இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.