மும்பையுடன் இன்று பலப்பரீட்சை: பதிலடி கொடுக்குமா குஜராத்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதுகிறது.
சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சிய 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிராக 30 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்த ரெய்னா பீல்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். வலியையும் பொறுத்துக்கொண்டே அவர் பேட் செய்தார். இந்த தொடரில் 309 ரன்கள் குவித்துள்ள அவர் இக்கட்டான நேரத்தில் வெளியே அமர விரும்பமாட்டார் என்று கருதப்படுகிறது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவார். பிராவோவின் காயத்தால் அணியின் சமநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணி தேர்வு வெற்றியை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
பந்து வீச்சில் பாக்னர், ஆன்ட்ரூடை கூட்டணி பலம் சேர்த்துள்ளது. இவர்களுடன் கேரளாவை சேர்ந்த பாசில் தம்பியும் யார்க்கர்கள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துபவராக உள்ளார். பேட்டிங்கில் டி20 புகழ் வீரர்களான மெக்கலம், ஆரோன் பின்ச் அதிரடியால் மிரட்டி வருகின்றனர். பெங்களூருக்கு எதிராக 34 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய ஆரான் பின்ச் மீண்டும் விளாச தயாராக உள்ளார்.
அனைத்து துறையிலும் பலமாக உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி அணி இந்த சீசனில் 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றுள்ளது. 2-ல் தோல்வியடைந்துள்ளது. இந்த இரு தோல்விகளும் புனே அணிக்கு எதிரானவையே ஆகும். 12 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணி மேலும் இரு வெற்றிகளை பெறும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும்.
தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லர், பார்த்தீவ் படேல் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுக்கின்றனர். ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளது அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கடந்த சில ஆட்டங்களில் சோபிக்க தவறினர்.
இவர்களிடம் இருந்து இன்று சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். எந்த கட்டத்திலும் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்ட பொலார்டும் அணிக்கு பலம் சேர்ப்பவராக உள்ளார். பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா, ஹர்பஜன் சிங், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருடன் மிட்செல் ஜான்சன், மெக்லீனகன் ஆகியோர் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.
இரு அணிகளும் இந்த தொடரில் 2-வது முறையாக மோத உள்ளன. கடந்த 16-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு குஜராத் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
இடம்: ராஜ்கோட் நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்