‘ஆம், நாங்கள் தவறு செய்துவிட்டோம்’: மாநகராட்சித் தேர்தல் தோல்விக்குப் பிறகு மனம் திறக்கும் கேஜ்ரிவால்
மாநகராட்சித் தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்த டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி தவறிழைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல்களில் தோல்வியடைவதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே காரணம் என்று இதுநாள் வரை கேஜ்ரிவால் கூறிவந்த நிலையில், முதல்முறையாக இவ்வாறு அவர் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக தன்னார்வலர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு இடையில் உரையாடினேன். அதை வைத்துப் பார்க்கும்போது எங்கள் கட்சி தவறு செய்துள்ளது புலனாகிறது. எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது பழைய நிலைக்கே திரும்பிச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
சாக்குகள் தேவை இல்லை, செயலாக்கம்தான் தேவை. மாற்றங்களை ஏற்கத் தயாராக இல்லை என்றால் அது கட்சியை சிறுமைப் படுத்துவதாகிவிடும்.
பணிகளுக்குத் திரும்ப இதுவே சரியான தருணம். இப்போது நாங்கள் விழுந்தாலும், விரைவில் எழுவோம். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி 2012-ன் இறுதியில் உருவானது. ஊழலுக்கு எதிராகப் போராடிய அன்னா ஹசாரேயுடன் இணைந்து பணியாற்றிய கேஜ்ரிவால், தனியாக ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கினார்.
அதைத் தொடர்ந்து 70 தொகுதிகள் கொண்ட 2015 டெல்லி தேர்தலில், 67-ல் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைத்தார் கேஜ்ரிவால்.
டெல்லிக்குப் பிறகு பஞ்சாப் மற்றும் கோவாவில் தடம் பதிக்க நினைத்த ஆம் ஆத்மியின் திட்டம் நிறைவேறவில்லை. தற்போது டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.