உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல பள்ளி மாணவர்கள் முடிவெட்ட உத்தரவிட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல தலைமுடியை வெட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மீரட்டின் சதர் பகுதியில் ரிஷப் அகாடமி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி நிர்வாகம் அண்மையில் தலைமுடி குறித்த புதிய அறிவுறுத்தலை வழங்கியது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போல மாணவர்கள் தலைமுடியை சீராக வெட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பின்பற்றாத மாணவர்கள் வகுப்புக் குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரித்திருந்தது.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் சீராக தலைமுடியை வெட்டாத மாணவர்கள் வகுப்புக் குள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. தகவல் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி முன் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் விவகாரம் பூதாகரமானதை அடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது பள்ளிக்கு அசைவ உணவு எடுத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து போலீஸார் பெற்றோர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.
அதேசமயம், இந்த குற்றச் சாட்டுகளைப் பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் நிர்வாகி ரஞ்சித் ஜெயின் கூறும்போது, ‘‘ஏற்புடைய வகையில் முடிவெட்டி வர வேண்டும் என்று தான் மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. யோகியை போல முடிவெட்ட வேண்டும் என்ற உத்தரவை மாணவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். ராணுவ வீரர்களைப் போல மாணவர்கள் முடிவெட்ட வேண்டும். அதைத் தான் பள்ளி நிர்வாகம் விரும்புகிறது’’ என்றார்.