திரைப்பட தயாரிப்பாளரை கொல்ல சதி: பாலிவுட் நடிகை பிரீத்திக்கு 3 ஆண்டு சிறை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு
திரைப்பட தயாரிப்பாளர் மதுர் பண்டார்கரை கொலை செய்ய சதி செய்த வழக்கில் பாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் பண்டார்கருக்கு எதிராக 2004-ல் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜெயின் பாலியல் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை 2012-ல் தள்ளுபடி செய்தது. முன்னதாக 2005-ல் பண்டார்கரை பழிவாங்க, பிரீத்தி ஜெயின் நரேஷ் பர்தேசி என்பவரை அணுகினார். நிழல் உலக தாதாவும், அரசியல் வாதியுமான அருண் கவ்லியின் உதவியாளரான பர்தேசியிடம் ரூ.75,000 பணம் கொடுத்து பண்டார்கரை கொல்ல ஏவினார்.
இதையடுத்து பண்டார்கரை கொல்ல பர்தேசி முயன்றார். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஆத்திர மடைந்த பிரீத்தி ஜெயின், தான் கொடுத்த பணத்தைத் திரும்ப தருமாறு பர்தேசிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து கொலை சதி குறித்து அருண் கவ்லி போலீஸாருக்கு தெரியப் படுத்தினார்.
அதன் அடிப்படையில் கடந்த 2005, செப்டம்பர் 10-ம் தேதி போலீஸார் பர்தேசியை கைது செய்தனர். பின்னர் பிரீத்தி ஜெயினையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தீவிர விசாரணையில் கொலைக்கான ஆயுதங்கள் வாங்குவது, கூலிப் படையினரை நியமிப்பது உள் ளிட்ட உதவிகளைச் செய்த சிவ்ராம் தாஸும் சிக்கினார். அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று பிரீத்தி ஜெயினைக் குற்ற வாளி என தீர்ப்பளித்து 3 ஆண்டு கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதே தண்டனை நரேஷ் பர்தேசிக்கும், சிவ்ராம் தாஸுக்கும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரீத்தி ஜெயினின் வழக்கறிஞர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.