பாகிஸ்தானில் இந்து கோவில் சிலைகள் சேதம்
பாகிஸ்தானில் இந்து கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது அந்நாட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், “பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கவுரோ நகரத்தின் இந்துக் கோயிலின் சிலைகள் வெள்ளிக்கிழமையன்று சேதப்படுத்தப்பட்டன.
சேதப்படுத்தப்பட்ட சிலைகளின் சில பகுதிகள் அருகிலுள்ள கழிவு நீரில் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
12 வயது சிறுவன் மீது சந்தேகம்
இந்தச் சம்பவம் குறித்து பிபிசி உருது வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தானில் இந்து கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் முதல் கட்ட விசாரணையில் 12 வயதுடைய சிறுவனின் காலடித் தடங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
கவுரோ நகரின் கவுன்சிலர் லால் மகேஷ்வரி இந்தச் சம்பவம் குறித்து கூறும்போது, “இம்மாதிரியான சம்பவம் இப்பகுதியில் முதல் முறையாக நடந்துள்ளது. பக்தர்கள் காலை கோவிலில் வழிபாட்டுக்கு செல்லும்போது சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது” என்றார்.
கவுரா நகரம் கராச்சியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் 2000-க்கும் அதிகமான இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன.