பெங்களூரு சிறைத்துறை கெடுபிடி: சாதாரண கைதியானார் சசிகலா – 14 நாட்களில் 3 பேர் மட்டுமே சந்திப்பு
பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, கடந்த 14 நாட்களில் 3 பேரை மட்டுமே சந்தித்து பேச அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஊடக செய்திகளின் எதிரொலியால் சிறைத்துறை அதிகாரி கள் சசிகலாவிடம் கடும் கெடுபிடிகளை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 18 வரையிலான 31 நாட்களில் 28 பார்வையாளர்களை சசிகலா சந்தித்து பேசியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி அம்பலப்படுத்தினார். இதையடுத்து சசிகலா சிறை விதிகளுக்கு முரணாக அதிக அளவிலான பார்வையாளர்களை சந்தித்து வருகிறார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து பரப்பன அக்ர ஹாரா சிறை அதிகாரிகள் கண்டிக்கப் பட்டனர். இதன்பின் சசிகலா விவகாரத் தில் சிறை விதிகள் கடுமையாக கடை பிடிக்கப்படும் என பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அறிவித்தார்.
இதனால் சசிகலாவை சந்திக்க அனுமதி கோரி அவரது உறவினர்கள் வழங்கிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனினும் சிறை விதிப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை 3 பேர் மட்டுமே சசிகலாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் டிடிவி தினகரன், இளவரசி மகன் விவேக் ஆகியோர் சசிகலாவை சந்திக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
மருத்துவர் சிவக்குமாருடன் சந்திப்பு
இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக சசிகலாவை சந்தித்த பார்வையாளர்கள் குறித்த தகவலை பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த மார்ச் 15-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15-ம் தேதி வரை சசிகலா 19 பேரை சந்தித்துள்ளார். இதேபோல ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து 29-ம் தேதி (நேற்று) வரை கடந்த 14 நாட்களில் 3 பேர் மட்டுமே சசிகலாவை சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் நெருங்கிய உறவினரும், மருத்துவருமான சிவக்குமார் சசிகலாவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். மற்ற இரு உறவினர்கள் சசிகலாவுடன் 45 நிமிடங்கள் பேசினர். பிற கைதிகளைப் போலவே சசிகலாவும் நடத்தப்படுகிறார். சசிகலாவுக்காக எவ்வித சிறப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமையில் வாடும் சசிகலா
சசிகலாவின் நடவடிக்கைகள் தொடர் பாக சிறைத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘சிறைக்கு வந்த தொடக்கத்தில் சசிகலா தெம்பாக காணப்பட்டார். ஆனால் அண்மையில் அதிமுகவில் நடந்த அரசியல் குழப்பங் கள், பிரச்சினைகள், டிடிவி தினகரனின் கைது, உறவினரின் மரணம் ஆகியவை சசிகலாவை வெகுவாக பாதித்துள்ளது. அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசியும் உடல்நிலை பாதிப்பு காரணமாக பெரும்பாலான நேரம் மருத்துவமனையிலேயே தங்கியிருக் கிறார். இதனால் சசிகலா தனிமையில் வாடி வருகிறார்’’ என தெரிவித்தனர்.