வெயிலுக்கு உகந்த உணவு: இளநீர் வழுக்கைப் பாயசம்
சுட்டெரிக்கிற வெயிலிலிருந்து தப்பிக்க, நாள் முழுக்க பனிக் குகைக்குள் அடைந்துகிடக்கலாமே என்று தோன்றும். சிலருக்குச் சாப்பாட்டைப் பார்த்தாலே எரிச்சல் வரும். “கோடைக்காலத்தில் காரம், புளி இரண்டையும் குறைத்துக்கொள்வது நல்லது. எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவையும் தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று அக்கறையோடு ஆலோசனை சொல்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். சூட்டைத் தணிக்கும் சில பதார்த்தங்களைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.
இளநீர் வழுக்கைப் பாயசம்
என்னென்ன தேவை?
இளம் தேங்காய்த் துண்டுகள் – 2 கப்
பால் – 600 மி.லி
பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி, சாரைப் பருப்பு – தலா அரை டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பனங்கற்கண்டு சேர்த்து சுண்டக் காய்ச்சுங்கள். பிறகு அதில் இளம் தேங்காய்த் துண்டுகள் சேர்த்து கொதிவந்தவுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவுங்கள். அத்துடன் நெய்யில் சாரைப் பருப்பு வறுத்துச் சேர்த்துக் கலக்கினால் இளநீர் வழுக்கைப் பாயசம் தயார்.