வெயிலுக்கு உகந்த உணவு: கத்தரிக்காய் புளிக்கோசு
என்னென்ன தேவை?
கத்தரிக்காய் (பெரியது) – 2
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 3
பச்சைமிளகாய் – 2
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு – தலா 1 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிய கட்டி
இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கத்தரிக்காய் மேல் லேசாக எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டெடுங்கள். ஆறியதும் தோலை நீக்கிவிட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். புளியோடு உப்பைச் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேருங்கள். பின்னர் புளிக் கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போனதும் மசித்து வைத்துள்ள கத்தரிக்காய் விழுதைப் போட்டு கொதிக்கவிடுங்கள். சிறிது நேரம் கழித்து, கெட்டியானதும் இறக்கிவைத்து கொத்தமல்லி தூவினால் கத்தரிக்காய் புளிக்கோசு தயார்.