கருணாநிதி உடல்நிலை மருத்துவர்கள் கண்காணிப்பில் சீராக உள்ளது: ஸ்டாலின் பேட்டி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (01-05-2017), சென்னை, சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தினப்பூங்காவில் நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:
செய்தியாளர்: அதிமுகவை ஒன்று சேர்க்கவோ, பிரிக்கவோ முயற்சிக்கவில்லை என்று பாஜகவினர் தெரிவித்து இருக்கிறார்களே?
ஸ்டாலின்: பாஜகவை பொறுத்தவரையில் அதிமுகவின் பின்னணியில் இல்லை என்று சொல்கிறார்கள். அதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும், நான் கேட்கின்ற ஒரே கேள்வி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகனராவ் வீட்டில் சோதனை நடந்தது. அதன் பிறகு என்னவானது? அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், 72 இடங்களிலும் பல மணி நேரங்கள் சோதனை நடைபெற்றது. அதன்பிறகு என்ன நடந்தது? அன்புநாதன், மேயராக இருந்த சைதை துரைசாமி, மாஃபியா கும்பல் ஆகியோர் தொடர்பான இடங்களில் நடந்த சோதனைகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த சோதனைகளில் எல்லாம் நடவடிக்கை எடுத்தால், பா.ஜ.க., அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், இரு அணிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை என்று சொல்லும் வாதத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
செய்தியாளர்: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை எப்படி உள்ளது? ஜூன் 1 ஆம் தேதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வாரா?
ஸ்டாலின்: அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சீரான நிலையில் அவரது உடல் நிலை உள்ளது. மருத்துவர்களிடம் இருந்து அனுமதி கிடைத்தால் நிச்சயமாக அவர் எல்லாரையும் சந்திப்பார்.
செய்தியாளர்: அதிமுகவிற்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார் என பாஜகவினர் குற்றம் சாட்டியிருக்கிறார்களே?
ஸ்டாலின்: அறிக்கையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்கள் கேள்விக்கு உள்ளாக்குவதை நம்பி நீங்களும் கேட்பது வேதனையாக உள்ளது. மாநில சுயாட்சிக்கு எதிராக, மாநிலத்தில் தேவையின்றி தலையிடுவது ஒருபக்கம் இருந்தாலும், ஏற்கனவே நடத்தப்பட்ட பல ரெய்டுகளில் முதலில் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்த வேண்டும், கண்துடைப்பாக இருக்கக்கூடாது என்று தான் வலியுறுத்துகிறோமே தவிர நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.