அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியா-ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்
அஸ்லான்ஷா ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது.
மலேசியாவின் இபோ நகரில் 26-வது சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்த இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி, நியூஸிலாந்துக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 1-1 என டிரா செய்தது. 2-வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் மலேசியாவை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 2-வது இடத்திலும், இங்கிலாந்து அடுத்த இடத்திலும் உள்ளன.
இந்த தொடரில் தரவரிசையில் முன்னிலையில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று நடைபெறும் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.