பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று மோதல்: ஹைதராபாத்தை சமாளிக்குமா டெல்லி
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோது கின்றன.
டெல்லி அணி 8 ஆட்டத்தில் 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசி யாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வித்தி யாசத்தில் தோல்விகண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெறும் 67 ரன்களுக்கு சுருண்டி ருந்தது.
அணியின் பந்து வீச்சு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் ஒட்டுமொத்த பேட்டிங்கும் கடந்த சில ஆட்டங்களாகவே கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் நடப்பு சாம்பியனான ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் டெல்லி அணிக்கு கடும் சோதனையாகவே இருக்கக்கூடும்.
அனுபவம் இல்லாத இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணியின் திறன் இந்த சீசனில் ஆட்டத்துக்கு ஆட்டம் குறைந்த வருகிறது. இதுஒருபுறம் இருக்க கேப்டன் ஜாகீர்கான் காயம் அடைந்துள்ளது அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவது நேற்று மாலை வரை உறுதி செய்யப்படவில்லை. இதுதவிர இங்கிலாந்து வீரரான சேம் பில்லிங், தனது தேசிய அணிக் கான போட்டியில் விளையாடுவதற் காக புறப்பட்டு சென்று விட்டார்.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா ஆகியோரும் இந்த வாரத்தில் தங்கள் தேசிய அணிக்கான போட்டி களில் பங்கேற்க செல்கின்றனர். இதனால் அணியின் பந்து வீச்சும் பலவீனம் அடையும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கெனவே பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப் படுத்த தவறி வரும் கருண் நாயர், ஜாகீர்கான் இல்லாத நிலையில் அணியை வழிநடத்துவதில் தடுமாற்றம் அடைகிறார். சகவீரர் களை ஊக்கப்படுத்தும் திறனில் அவர் தேக்கம் அடைந்தவராக உள்ளார்.
ஹைதராபாத் அணி 10 ஆட்டத் தில் 6 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லாத நிலையில் 13 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இன்னும் இரு வெற்றிகளை பெற்றால் பிளே ஆப் சுற்றில் கால்பதித்துவிடும். தனது அபாரமான பேட்டிங்கால் கேப்டன் டேவிட் வார்னர் அணியை திறம்பட முன்னெடுத்துச் செல்கிறார்.
கடைசியாக வலுவான கொல்கத் தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத் அணி. இந்த ஆட்டத்தில் வார்னர் 59 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் விளாசியிருந்தார்.
அவரிடம் இருந்து இன்று மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். ஷிகர் தவண் நிதானமான ஆட்டத்தால் சீராக ரன் சேர்த்து வருகிறார். வில்லியம் சனின் அதிரடி அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. யுவராஜ் சிங்கும் அதிரடிக்கு திரும்பும் பட்சத்தில் ஹைதராபாத் அணி அபாயகரமான அணியாக திகழக்கூடும்.
பந்து வீச்சில் 20 விக்கெட்கள் சாய்த்துள்ள புவனேஷ்வர் குமார் இந்த சீசனில் அபாரமாக செயல் பட்டு வருகிறார். கடைசி கட்டத்தில் இவரது நேர்த்தியான பந்து வீச்சு அணிக்கு வெற்றியை தேடித் தருவதாக அமைந்துள்ளது. ஆசிஷ் நெஹ்ரா தனது அனுபவத்தால் பலம் சேர்க்கிறார்.
இவர்கள் இருவரின் உதவியுடன் இளம் வீரரான முகமது சிராஜூம் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறார். சுழற்பந்து வீச்சில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கானும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக உள்ளார்.
அதேவேளையில் டெல்லி அணி யில் பந்து வீச்சில் வெளிநாட்டு வீரர் களான மோரிஸ், ரபாடா, கோரே ஆண்டர்சன் ஆகியோர் மட்டுமே எதிரணிக்கு சவாலாக இருக்கின் றனர். அமித் மிஸ்ரா அதிக அள வில் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவை ஏற்படுத்துகிறது.
இந்த சீசனில் முதல் வீரராக சதம் அடித்த சஞ்சு சாம்சன், ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினாலும் அதனை முன்னெடுத்துச் சென்று பெரிய அளவிலான ரன்குவிப்பாக மாற்றுவதில் சோடை போய்விடு கிறார். டெல்லி அணி முழுவீச்சில் முன்னேற்றம் கண்டால் அது அதிசயமாகவே இருக்கும். அந்த அணிக்கு ஒரே சாதகம் எஞ்சி உள்ள 6 ஆட்டங்களில் 5-ஐ சொந்த மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளதுதான். சொந்த மைதானம் அந்த அணிக்கு எந்த வகையில் கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இடம்: டெல்லி
நேரம்: இரவு 8
நேரடிஒளிபரப்பு: சோனி சிக்ஸ்