இரு அணிக்கும் நிர்வாகிகள் ஆதரவு : சின்னத்தை மீட்பதில் சிக்கல் நீடிப்பு
அ.தி.மு.க.,வின் இரு அணிகளுக்கும் ஆதரவு தெரிவித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பிரமாண வாக்குமூலத்தில் கையெழுத்திடுவதால், இரட்டை இலை சின்னத்தை மீட்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி, பன்னீர் அணி சார்பில், 45 லட்சம் பேரின் பிரமாண வாக்குமூலத்தை, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய, சசிகலா அணி அவகாசம் கோரியது.
அதை ஏற்று, தேர்தல் கமிஷன் அவகாசம் வழங்கியது.தற்போது, சசிகலா அணியினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், பிரமாண வாக்குமூலத்தில், கையெழுத்து பெற்று வருகின்றனர். அதில், பொதுச்செயலர், சசிகலா, துணைப் பொதுச்செயலர், தினகரன், சட்டசபை கட்சி தலைவரான, முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவு அளிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பன்னீர் அணியினரும், பிரமாண வாக்குமூலத்தில், கையெழுத்து பெற்று வருகின்றனர். கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் பெரும்பாலானோர், பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்து, கையெழுத்திட்டு வருகின்றனர்.அதேபோல், சசிகலா அணி பிரமாண வாக்குமூலத்தில் கையெழுத்திட்டவர்கள், பன்னீர் அணி பிரமாண வாக்குமூலத்திலும், கையெழுத்திடுகின்றனர்.
இது, இரு அணி நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே, ஒரு அணிக்கு ஆதரவாக கையெழுத்து போட்டிருந்தாலும், இதிலும் கையெழுத்திடுமாறு, மாவட்ட நிர்வாகிகள் வற்புறுத்துகின்றனர். அதனால், தவிர்க்க முடியவில்லை என, கீழ்மட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எல்லா நிர்வாகிகளிடமும், இரு அணி தரப்பிலும், பிரமாண வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளதால், இரட்டை இலை சின்னத்தை மீட்பதில், சிக்கல் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.