உ.பி.,ல் மொபைலில் பேசும் பெண்களுக்கு அபராதம்
உ.பி.,யில் கிராமம் ஒன்றில் மொபைலில் பேசியபடி தெருவில் நடந்து செல்லும் பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொபைலில் பேசினால் அபராதம் :
உ.பி.,யின் மதுரா மாவட்டத்தில் உள்ள மடோரா கிராமத்தில் பெண்கள் மொபைல் போனில் பேசிய படி தெருவில் நடந்து சென்றால் அபராதம் விதிக்கப்படும் என, பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் மொபைலில் பேசியபடி செல்லும் பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்கப்படும். இதே போன்று பசுவதை கூடங்கள் அல்லது பசுக்களை திருடுபோருக்கு ரூ.2 லட்சமும், சாராயம் விற்பனை செய்தால் ரூ.1.11 லட்சமும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தந்தால் பரிசு :
இந்த தவறுகள் குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தகவல் தருவோருக்கு ரூ.51,000 பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றங்களை குறைப்பதற்காக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குற்றங்கள் குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தெரிவிப்பர். குற்றங்களுக்கான தண்டனை குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் இறுதி முடிவெடுக்கும் எனவும் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேலை பஞ்சாயத்து நிர்வாகம் குற்றங்களை தடுக்க தவறினால், அதன் பிறகு போலீசில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களின் சொத்துக்களை விற்று அபராதம் தொகை வசூலிக்கப்படும் எனவும் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.