ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு
ஐசிசி-யின் டி20 தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு பின்ன டைவு ஏற்பட்டுள்ளது. 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி 6 புள்ளிகளை இழந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது 118 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 2009-ல் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி 5 புள்ளிகள் கூடுதலாக பெற்று 121 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
7 புள்ளிகளை கூடுதலாக பெற்ற இங்கிலாந்து அணி 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி பாகிஸ்தானை போன்று 121 புள்ளிகள் பெற்ற போதிலும் சிறிய அளவிலான வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
நியூஸிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி (111) 2 இடங்கள் பின்தங்கி 5-வது இடத்தையும், ஆஸ்திரேலியா (110) 6-வது இடத்தையும், நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் (109) 7-வது இடத்தையும், இலங்கை(95) 8-வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் (90) 9-வது இடத்தையும், வங்கதேசம் (78) 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.