சதம் விளாசினார் அசார் அலி
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார்.
பார்படாசில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தில் 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. பிராத்வெயிட் 9, ஹெட்மேயர் 1, ஹோப் 5, பொவல் 38, விஷால் சிங் 3, டவுரிச் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ராஸ்டன் சேஸ் 131, ஜேசன் ஹோல்டர் 58 ரன்களுடன் 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். இருவரும் மேற்கொண்டு ரன்கள் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய தேவந்திர பிஷூ 14, ஜோசப் 8 ரன்களில் வெளியேற, முடிவில் 98.5 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் 312 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
பாகிஸ்தான் தரப்பில் முகமது அபாஸ் 4, முகமது அமீர் 3, யாசிர் ஷா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரர்களான அசார் அலி, அகமது ஷேசாத் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஷேசாத் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாபர் அசாம், யூனுஸ்கான் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தனர்.
அசார் அலி 81, கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 7 ரன்களுடன் ஆட்ட மிழக்காமல் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்து விளையாடி னார்கள். சிறப்பாக விளையாடி சதம் அடித்த அசார் அலி 105 ரன்களில் தேவந்திர பிஷூ பந்தில் ஆட்டமிழந்தார். 106 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. மிஸ்பா 68, ஆசாத் ஷபிக் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.