அஸ்லான் ஷா ஆக்கி: இந்திய அணிக்கு 2–வது வெற்றி மன்தீப்சிங் அசத்தலால் ஜப்பானை சாய்த்தது
26–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது.
இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6–வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரூபிந்தர் பால்சிங் அடித்த கோலால் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
மன்தீப்சிங் ‘ஹாட்ரிக்’
10–வது நிமிடத்தில் கசுமா முரதா திருப்பிய கோலால் ஜப்பான் அணி சமநிலையை கண்டது. 43–வது நிமிடத்தில் ஹெய்டா யோஷிஹரா அடித்த கோலால் ஜப்பான் அணி முன்னிலை பெற்றது. 45–வது நிமிடத்தில் மன்தீப்சிங் அடித்த அதிரடி கோலால் இந்திய அணி சமநிலையை எட்டியது. அடுத்த நிமிடத்தில் மிதானி அடித்த கோலால் ஜப்பான் அணி மீண்டும் முன்னிலையை தனதாக்கியது.
51–வது நிமிடத்தில் மன்தீப்சிங் 2–வது கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 3–3 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. 58–வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் மன்தீப்சிங் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்திய அணி வெற்றி
பின்னர் இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 4–3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து 2–வது வெற்றியை பெற்றது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மலேசியாவை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2–1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை சாய்த்து 3–வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதற்கிடையில் முந்தைய லீக் ஆட்டத்தில் வலது முழங்காலில் காயம் அடைந்த இந்திய அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது காயம் குணமடைய 2 முதல் 3 மாதங்கள் வரை பிடிக்கலாம் என்று தெரிகிறது. எனவே அவர் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் உலக லீக் அரைஇறுதிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.