இஸ்லாம் உலகத்தை கட்டுப்படுத்துவதே ஈரானின் நோக்கம்: சவூதி குற்றச்சாட்டு
இஸ்லாம் உலகத்தைக் கட்டுப்படுத்துவதையே ஈரான் நோக்கமாக கொண்டுள்ளது என்று சவூதி அரேபியா குற்றச்சாட்டியுள்ளது.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிக அரிதாகத்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். அந்த வகையில் சவூதியின் இளவரசரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான முகமத் பின் சல்மான் அல் சவுத் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று சவூதியின் பல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதில் முகமத் பின் சல்மான் அல் சவுத் ஈரான் மீது குற்றம் சுமத்தி பல கருத்துகளை முன் வைத்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது பின் சல்மான் , ” இஸ்லாம் உலகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளவரை ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.
ஈரான் போன்ற தீவிரவாத சித்தாந்தத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஆட்சியை நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? எங்களுக்கு நன்றாகவே தெரியும் ஈரானின் முதல் எதிரி நாங்கள்தான் என்று. சவூதி அரேபியாவை நோக்கி போர் வரும்வரை நாங்கள் காத்திருக்கவில்லை, போர் ஈரானை நோக்கி செல்வதற்காகவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக சவூதி அரேபிய சிறையில் இருந்த ஷியா பிரிவு முஸ்லிம் மதகுருவுக்கு அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டித்து ஈரானில் உள்ள சவூதி தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஈரானுடனான தூதரக உறவை சவூதி அரேபியா முறித்துக் கொண்டது. மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று ஈரான் அரசு தடை விதித்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
1979-ம் ஆண்டு ஏற்பட்ட ஈரான் புரட்சியிலிருந்து முஸ்லிம் பிராந்தியத்தில் எந்த நாடு தலைமைத்துவம் பெறப் போகிறது என்பது குறித்து ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையே மோதல்கள் நடந்து வருவது குறிப்பித்தக்கது.