ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி புனே அணி 7-வது வெற்றி
கொல்கத்தா வீரர் நாதன் கவுல்டர்-நிலே, சிக்சர் நோக்கி தூக்கியடித்த பந்தை புனே வீரர்கள் பென் ஸ்டோக்சும், கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் தாவி குதித்து பிடிக்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டனர். அந்த காட்சியை படத்தில் காணலாம். அவர்களின் முயற்சி வீண் ஆக, அந்த பந்து சிக்சராக மாறியது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி புனே சூப்பர் ஜெயன்ட் அணி 7-வது வெற்றியை பதிவு செய்தது.
உத்தப்பா நீக்கம்
10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின. கொல்கத்தா அணியில் லேசான காயத்தால் அவதிப்படும் விக்கெட் கீப்பர் உத்தப்பாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த புனே கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தாவுக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் சுனில் நரின் (0) பந்து வீசிய ஜெய்தேவ் உனட்கட்டிடமே கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஷெல்டன் ஜாக்சன் (10 ரன்) சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை எதிர்கொண்ட போது, ஸ்டம்பை மிதித்து ‘ஹிட்விக்கெட்’ ஆனார். ஐ.பி.எல்.-ல் ஒரு வீரர் ஹிட்விக்கெட் ஆவது இது 9-வது நிகழ்வாகும்.
தொடர்ந்து புனே பந்து வீச்சாளர்கள் கொடுத்த நெருக்கடியால் கொல்கத்தா அணி திணறியது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் கவுதம் கம்பீர் (24 ரன், 19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வாஷிங்டன் சுந்தர் வீசிய ஓவரில் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் அடித்து விட்டு மீண்டும் பந்தை தூக்கிய போது எல்லைக்கோடு அருகே ரஹானேவிடம் சிக்கினார். யூசுப்பதானும் (4 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
கொல்கத்தா 155 ரன்
55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (9.1 ஓவர்) பறிகொடுத்து பரிதவித்த கொல்கத்தா அணியை மனிஷ்பாண்டேவும், காலின் டி கிரான்ட்ஹோமும் இணைந்து சரிவில் இருந்து காப்பாற்றினர். ஷர்துல் தாகுரின் பந்து வீச்சில் மனிஷ் பாண்டே ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடிக்க, கிரான்ட்ஹோம் தனது பங்குக்கு இம்ரான் தாஹரின் ஓவரில் தொடர்ந்து இரு சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டினார்.
அணியின் ஸ்கோர் 103 ரன்களாக உயர்ந்த போது, இந்த ஜோடி பிரிந்தது. மனிஷ் பாண்டே 37 ரன்களும் (32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), கிரான்ட்ஹோம் 36 ரன்களும் (19 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினார். முதல் 3 ஓவர்களில் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த உனட்கட் தனது கடைசி ஓவரில் (19-வது ஓவர்) 21 ரன்களை வாரி வழங்கினார். இதில் சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்சரும், நாதன் கவுல்டர்-நிலே ஒரு சிக்சர் அடித்ததும் அடங்கும்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 30 ரன்களுடன் (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். புனே தரப்பில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
புனே வெற்றி
அடுத்து 156 ரன்கள் இலக்கை நோக்கி புனே அணி ஆடியது. ரஹானே (11 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (9 ரன்), மனோஜ் திவாரி (8 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்தாலும் மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் ராகுல் திரிபாதி, கொல்கத்தாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். ரன்மழை பொழிந்த அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் கொல்கத்தா பவுலர்கள் திண்டாடினர்.
23 பந்துகளில் அரைசதத்தை கடந்த அவர் புனேயின் வெற்றிப்பாதைக்கு அடித்தளம் போட்டார். இதற்கிடையே பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னிலும், டோனி 5 ரன்னிலும் வெளியேறினர். இலக்கை நெருங்கிய சமயத்தில் மராட்டியத்தை சேர்ந்த திரிபாதி 93 ரன்களில் (52 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார்.
புனே அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 11-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணிக்கு இது 7-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை வெகுவாக நெருங்கியிருக்கிறது. கொல்கத்தாவுக்கு இது 4-வது தோல்வியாகும்.
ஒட்டுமொத்தத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக புனே சுவைத்த முதல் வெற்றி இது தான். இதற்கு முன்பு அந்த அணிக்கு எதிராக மோதியிருந்த 3 ஆட்டங்களிலும் புனே தோல்வி கண்டிருந்தது.