மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழக்கு 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு 3-வது நீதிபதி விசாரணைக்கு சிபாரிசு
மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து 3-வது நீதிபதி விசாரணைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராஜேஸ் வில்சன் என்பவர் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் கூறி இருப்பதாவது:-
மருத்துவ மேற்படிப்பில் மொத்த இடத்தில், 25 சதவீதம், அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த அரசு டாக்டர்கள் மலை கிராமங்கள், குக்கிராமங்களில் பணியாற்றியிருந்தால், அவர்கள் ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில், 10 சதவீத மதிப்பெண் ஒரு ஆண்டுக்கு வழங்க வேண்டும். இந்த ஊக்க மதிப்பெண் அதிக பட்சம் 3 ஆண்டுகளுக்கு 30 சதவீதம் வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் விதி கூறுகிறது. ஆனால், தமிழக அரசு, மலைகிராமங்கள், குக்கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் என்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஆண்டுக்கு 1 மதிப்பெண் என்றும் இவர்களுக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண் வழங்கலாம் என்று 2017-2018-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பு விளக்க குறிப்பேட்டில் கூறியுள்ளது.
மேலும், ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை 90 மதிப்பெண்ணாகவும், இந்த ஊக்க மதிப்பெண்ணை 10 மதிப்பெண்ணாகவும் கணக்கிட்டு மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு மருத்துவ மேற்படிப்புக்கு சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது சட்டவிரோதமாகும். மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது ஆகும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ‘இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்த விதிகளை பின்பற்றி மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்’ என்று கடந்த மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவினால், தங்களுக்கான சலுகைகள் பறிபோய்விட்டன என்று கூறி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேல்-முறையீடு
இந்தநிலையில், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணாவின் உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அரசு டாக்டர்கள் பி.திருநாவுக்கரசு, ஆர்.கோகுல், பி.அருண் உள்பட பலர் மேல்முறையீடு செய்தனர்.
மருத்துவ மேற்படிப்பிற்கான கவுன்சிலிங்கை மே 7-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், இந்த மேல்முறையீட்டு வழக்குகள், அவசர வழக்குகளாக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்குகளை நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சு கடந்த 2 நாட்களாக விசாரித்தது. அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் மூத்த வக்கீல் விஜயநாராயணன், வக்கீல் வி.பி.ராமன், தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், கே.எம்.விஜயன், ஜி.சங்கரன், காட்சன் சாமிநாதன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்புகளை நேற்று வழங்கினர். ஆனால் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
நீதிபதி சசிதரன்
நீதிபதி கே.கே.சசிதரன், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டின் அடிப்படையில் நடத்தவேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.
அந்த தீர்ப்பில், “மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதற்காக, அங்கு பணியாற்றும் டாக்டர்களை ஊக்கப்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, இந்த ஊக்க மதிப்பெண் வழங்கும் முறையை முதல் முதலில் ஒடிசா மாநில அரசு தான் அமல்படுத்தியது. இதன் பின்னர் அனைத்து மாநிலங்களும் இந்த முறையை கடை பிடிக்கத் தொடங்கியது. தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்பில் சேரும் அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் முறை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்து வருகிறது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்” என கூறி உள்ளார்.
நீதிபதி சுப்பிரமணியம்
ஆனால், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றித்தான் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்” என தீர்ப்பு வழங்கினார்.
அவர் தனது தீர்ப்பில், “இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக தமிழக அரசு ஊக்க மதிப்பெண் நிர்ணயம் செய்துள்ளது. இது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தான் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு செல்லும். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடிசெய்கிறேன்” என கூறி உள்ளார்.
3-வது நீதிபதி விசாரணை
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளதால், இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரிக்க, தலைமை நீதிபதிக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் 3-வது நீதிபதி, இரு நீதிபதிகளின் தீர்ப்பில் எது சரியானது என்பதை முடிவு செய்து தீர்ப்பு அளிப்பார். அந்த தீர்ப்பே, இந்த வழக்கின் இறுதி தீர்ப்பாக அமையும்.
மேலும் மே 7-ந் தேதி கவுன்சிலிங் நடைபெற வேண்டியுள்ளதால், இந்த மேல்முறையீட்டு வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று அல்லது நாளை 3-வது நீதிபதி நியமிக்கப்பட்டு, அவர் முன்பு விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.