Breaking News
ரூ.17 ஆயிரம் கோடி நிதி வேண்டும் மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை

எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுரங்கத்துறை சார்பில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று பேசியதாவது:-

2011-ம் ஆண்டில் இருந்து மாநில மற்றும் மத்திய தொகுப்பில் புதிய மின் நிலையங்களை இயக்கத்துக்கு கொண்டு வந்ததன் மூலமும், நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரத்தை கொள்முதல் செய்ததன் மூலமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மூலமும் கூடுதலாக 9 ஆயிரத்து 924 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டில் ரூ.13 ஆயிரத்து 985 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்பு 2016-17-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 675 கோடியாக குறைந்துள்ளது.

உபரி நிலை

2010-11-ம் ஆண்டில் ரூ.2.16 ஆக இருந்த சராசரி மின் வழங்கும் வருமானம் மற்றும் சராசரி மின் விற்பனை விலை ஆகியவற்றின் இடைவெளி 2016-17ம் ஆண்டில் 45 பைசாவாக குறைந்துள்ளது. தமிழ்நாடு 2016-17-ம் நிதியாண்டில் மின் உற்பத்தியில் உச்ச உபரி நிலையை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டில் 200 மில்லியன் யூனிட்டாக இருந்த ஒரு நாளைய சராசரி மின் நுகர்வு 2016-ம் ஆண்டில் 300 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய பூர்த்தி செய்யப்பட்ட மின் தேவை 14 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த சூரிய ஒளி மின் சக்தி நிறுவு திறன் ஆயிரத்து 693 மெகாவாட் மற்றும் காற்றாலை மின் நிறுவு திறன் 7 ஆயிரத்து 845 மெகாவாட். தமிழ்நாட்டின், காற்றாலை மின் நிறுவுதிறன் இந்தியாவின் மொத்த காற்றாலை மின் நிறுவுதிறனில் 28 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மேலும் 4,500 மெகாவாட் காற்றாலை, 4,500 மெகாவாட் சூரியஒளி மின் திட்டங்களை வருகிற ஆண்டுகளில் அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.

மின்சார விற்பனை

மேலும் 2016-17ம் ஆண்டில் தமிழ்நாடு 13 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவு காற்றாலை மின்சாரத்தையும், ஆயிரத்து 644 மில்லியன் யூனிட் அளவு சூரிய ஒளி மின்சாரத்தையும் உற்பத்தி செய்துள்ளது. தமிழ்நாடு தற்போது வெளி மாநிலங்களுக்கு ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்யும் நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் உபரி காற்றாலை மின்சாரம் தேவைப்படும் மாநிலங்களுக்கு விற்பனை செய்ய ஏதுவாக தனிப்பயன் பசுமை மின் வழித்தடத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும்.

சென்னையை பாதுகாக்க…

வர்தா புயலால் சென்னையில் சேதம் அடைந்த மின் கட்டமைப்பை சீரமைக்க ஆயிரத்து 93 கோடி ரூபாய் கோரப்பட்டது. மேலும், புயல், வெள்ளத்தால் வருங்காலத்தில் சென்னையை பாதுகாக்க மேலே செல்லும் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றுதல், தற்போதுள்ள மின்மாற்றி கட்டமைப்புகளை வளைய சுற்றுதர அமைப்புகளாக மாற்றுதல், தற்போதுள்ள சாதாரண மின்சார பெட்டிகளை அதிக திறன் கொண்ட 6 வழி மின்சார பெட்டிகளாக மாற்றுதல் ஆகிய திட்டங்களுக்கு ரூ.17 ஆயிரம் கோடி தேவைப்படும்.

இதை மானியமாகவோ அல்லது கிராமப்புற மின் மயமாக்கல் நிறுவனம் மற்றும் மின்விசை நிதி நிறுவனம் ஆகியவற்றின் மூலம் மென்கடனாகவோ மத்திய அரசு அளிக்க வேண்டும்.

அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகுகள் 1, 2-ன் மொத்த மின் நிறுவுதிறனான 2 ஆயிரம் மெகாவாட்டில் ஆயிரத்து 125 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அலகுகள் 3, 4-ன் மொத்த மின் உற்பத்தியான 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஆண்டுக்கு 3 மில்லியன் டன்கள் நிலக்கரி என்ற அளவிற்கு உயர்த்தி தர உத்தர விட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளர் விக்ரம் கபூர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.சாய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.