‘இந்தி’ எழுதத் தெரியாத இளைஞருடன் திருமணம் வேண்டாம்: உ.பி.யில் துணிச்சலாக மறுத்த இளம்பெண்
அழகாய் இல்லை, கேட்ட வரதட்சணை தரவில்லை என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக பல திருமணங்கள் நின்று போயுள்ளன அல்லது திருமணத்துக்குப் பிறகு தம்பதிகள் பிரிந்து சென்றுள்ளனர். ஆனால், உத்தரபிரதேசத்தில் மணமகனுக்கு ‘இந்தி’ தெரியவில்லை என்று கூறி அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார் இளம்பெண் ஒருவர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:
உத்தரபிரதேச மாநிலம் மெய்ன்புரி மாவட்டம் குராவலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், பராகா பாத் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி திருமணத்துக்கு முன்பு இருவரையும் சந்திக்க வைக்க பெற்றோர் திட்டமிட்டனர்.
கடந்த 2-ம் தேதி மெய்ன்புரியில் பொது இடத்துக்கு இரு வீட்டாரும் வந்தனர். அவர்களுடன் வந்த இளம்பெண்ணும் இளைஞரும் தனியாகச் சந்தித்தனர். அப்போது தான் கொண்டு வந்திருந்த
‘டைரி’யை பெண்ணிடம் கொடுத்த இளைஞர், இந்தியில் சில வார்த்தைகளைக் கூறி எழுதச் சொன்னார். அந்தப் பெண்ணும் எழுதிக் கொடுத்தார்.
‘டைரி’யைப் பார்த்த இளைஞர், எல்லா வார்த்தைகளையும் தவறில்லாமல் எழுதி இருப்பதைப் பார்த்து திருமணத்துக்கு சம்மதித்தார். ஆனால் திடீரென மண மகனிடம் ‘டைரி’, பேனாவைக் கொடுத்த இளம்பெண், தான் சொல்லும் இந்தி வார்த்தைகளை எழுதச் சொன்னார். மேலும், அவரது வீட்டு முகவரியையும் எழுதச் சொன்னார். அதேபோல் அவரும் எழுதிக் கொடுத்தார். ஆனால், முகவரி உட்பட எல்லாவற்றிலும் எழுத்துப் பிழைகள் ஏராளமாக இருந்தன. இதையடுத்து,
‘இந்தி’யைச் சரியாக எழுதத் தெரியாத அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அப்பெண் மறுத்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் உறவினர் களும் இளம்பெண்ணைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அந்தப் பெண் கடைசி வரை தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் இரு வீட்டாரும் சோகத்துடன் பிரிந்து சென்றனர். இத்தனைக்கும் அந்த இளைஞர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர். இளம்பெண்ணோ 5-வது கிரேடுதான் முடித்திருக்கிறார். இந்தச் சம்பவம் உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.