எங்கள் மகள் நிர்பயா ஒரு தேவதை’: பெற்றோர் கண்ணீர்
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. பின்னர் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி “உணர்ச்சி பொங்க” செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அந்த சம்பவத்துக்குப் பிறகு, என் மகள் ‘நிர்பயா’ (பயமறியாதவள்) என்ற பெயரில் உலகம் அழைக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பிக்கை இழந்தேன். ஆனால், மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராட மறுநாள் முழு பலத்துடன் எழுந்துவிடுவேன்.
என் மகளை தினம் தினம் நினைத்துப் பார்க்கிறேன். அவள் என்னை விட்டுச் சென்ற அடுத்த நொடியில் இருந்து நீதிமன்றம், அரசாங்கத்துடன் போராடி வருகிறேன். என்னுள்ளே நான் போராடிக் கொண்டிருக்கிறேன். என் குடும்பம் எந்தளவுக்கு இந்த துயரத்தை சந்தித்து வருகிறது என்பதை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆனால், நான் நம்பிக்கையை இழக்கவில்லை.
இவ்வாறு கண்ணீர் மல்க ஆஷா தேவி கூறினார்.
மகளை இழந்த துன்பத்திலும், “நிர்பயா ஜோதி அறக் கட்டளை” யை ஆஷா தேவி தொடங்கி, பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்கள், அவர் களது குடும்பத்தினருக்கு உதவிகள் செய்து வருகிறார்.
நிர்பயாவின் தந்தை பி.என்.சிங் கூறும்போது, ‘‘என் மகள் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். தந்தை – மகள் என்ற எங்கள் பந்தம் மிகவும் சிறப்பானது. அவளை மகன் போலவே வளர்த்தேன். அவள் அனுபவித்த வலிகள்தான், போராட வேண்டும் என்ற துணிச்சலை எனக்கு கொடுத்துள்ளது. அவள் எங்கள் தேவதை’’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.