தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வர வாய்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் கருத்து
‘‘தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தேர்தலை சந்திக்க தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும்’’ என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்படாத நிலையில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று நீதி கேட்டு பயணம் தொடங்கினார். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், கொட்டிவாக்கத்தில் நேற்று பயணத்தை தொடங்கிய அவர் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
சுமார் 74 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா குண மடைவார் என நினைத்தோம். ஆனால். அவர் மரணமடைந்த செய்தி ஏழரை கோடி தமிழக மக்கள், உலக தமிழர்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரைக் காப்பாற்ற முடிய வில்லையே என்ற ஏக்கம் உள்ளது. ஜெயலலிதா மர்ம மரணத்தின் முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்பதுதான் இந்த தர்மயுத்தத் தின் நோக்கம். அதற்குத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இந்தக் கட்சி தொண்டர்களின் கட்சியாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தனர். இந்த இயக்கம் ஒரு குடும்பத்தின் கையில் சிக்கக்கூடாது.
தற்போது முதல்வர் பழனிசாமி தடம் மாறிச் சென்று கொண் டிருக்கிறார். அவரை வருங் காலத்தில் நேர்வழிப்படுத்துவது தான் இந்த தர்மயுத்தத்தின் நோக்கமாகும். இந்த பினாமி அரசின் ஆட்சி வெளிப்படையாக இருக்க வேண்டும். பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலா, துணை பொதுச் செயலாளராக உள்ள தினகரன் ஆகியோரை நீக்க வேண்டும் என கூறினோம். ஆனால், அவர்கள் செயலில் வெளிப்படைத்தன்மை இல்லை. அப்படியானால் எப்படி நம்புவது? மக்கள் ஏமாளிகள் இல்லை. பழனிசாமி தரப்பினர் ஆடும் ஓரங்க நாடகத்தில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும்.
ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அப்போதுதான் நாங்கள் நம்புவோம். முதல்வர் பழனிசாமி தரப்பினர் தடம்மாறிச் சென்று எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டனர். அவர் களுக்கு விடுதலை கிடையாது. இக்கட்சி ஓபிஎஸ், மைத்ரேயன், பொன்னையன், கே.பி.முனுசாமி என யார் குடும்பத்தினரிடமும் சிக்கிவிடக் கூடாது. அதேபோல், யாரும் யார் வீட்டு வாசலிலும் பதவிக்காக நிற்கக் கூடாது. ஊழலில்லாமல் சமூக சேவையில் ஈடுபடுபவர்தான் சட்டப்பேரவை உறுப்பினராக வரவேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்.
தற்போது உள்ளாட்சி தேர்தலா அல்லது சட்டப்பேரவை பொதுத் தேர்தலா எது முந்தும் என்ற பட்டிமன்றம் நடக்கிறது. எங்களை பொறுத்தவரை சட்டப்பேரவை தேர்தல் முதலில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தேர்தலை சந்திக்க தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும்.எந்த தேர்தல் வந்தாலும் அதில் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், அதிமுக எம்பி மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கள், இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன், மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.