ஒளிரும் நட்சத்திரம்: நயன்தாரா
1. இந்திய விமானப்படையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் நயன்தாராவின் அப்பா குரியன் கொடியாட்டு. இதனால் குஜராத்தின் ஜாம்நகர், தலைநகர் டெல்லி ஆகிய நகரங்களில் பத்தாம் வகுப்புவரை படித்தார் நயன்தாரா. இந்தி மொழி நன்கு அறிந்தவர். தமிழ், தெலுங்கு மொழிகளை நன்கு பேசக் கற்றிருக்கிறார். கேரளத்தின் திருவல்லாவில் உள்ள புனித தோமா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபோது, மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடுவால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அறிமுகப் படம் பெரும் வெற்றி பெற்றது.
2. நயன்தாரா அறிமுகமான ‘மனசின்னக்கரே’(2003) படத்தைப் பார்த்த நடிகர் சரத்குமார் தனது ‘ஐயா’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவரும்படி அழைத்துத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பளீர் புன்னகையும் ஈர்க்கும் கண்களும் கைகொடுக்க, அலட்டல் இல்லாத இயல்பான நடிப்புத்திறன் இயற்கையாகவே கைவரப்பெற்றிருந்ததால் ரசிகர்களை வெற்றிகொள்ளும் கதாநாயகி ஆனார்.
3. எவ்வளவு சீக்கிரம் புகழின் உச்சியை எட்டினாரோ அதே வேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கி ‘குயின் ஆஃப் காண்ட்ரவர்சி’ என்று பெயரெடுத்தார். ஆனால், சர்ச்சைகளிலிருந்து சட்டென்று வெளியேறி நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதனால் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் கொண்டாடப்படும் வெற்றிக் கதாநாயகியானார்.
4. ‘நயன்தாரா எனது மாடல்’ என வளரும் கதாநாயகிகள் பேட்டி தரும் அளவுக்குத் தொழில்பக்தி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாகியிருக்கும் நயன்தாராவுக்குத் திரையுலகில் நெருக்கமான நண்பர்கள் சிலர் மட்டுமே. அவர்களில் ஒருவர் நடன இயக்குநர் பிருந்தா. நெருங்கிய நண்பர்களிடம் மனம்விட்டுச் சொந்த விஷயங்களைப் பேசுவதும் வாய்விட்டுச் சிரிப்பதும் நயன்தாராவுக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்துக்கான ஆடைகளைத் தானே வடிவமைத்துக்கொள்வார். இதற்காகப் படப்பிடிப்பு இடைவேளையில் இணையத்தில் உலாவுவது அதிகம் பிடிக்கும்.
5. கடந்துவந்த பாதையில் தனக்குக் கைகொடுத்த யாரையும் மறக்கவிரும்பாதவர் நயன்தாரா. தமிழில் அறிமுகமான ‘ஐயா’ படத்தில் தனக்கு ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய ரங்கநாதன் ராஜுவையே தனது மேக்-அப் மேனாக இதுவரை வைத்திருக்கிறார். ராஜுவின் பணிவைக் கண்டு அவரையே தனது கால்ஷீட் மேனேஜராகவும் உயர்த்தியிருக்கும் நயன்தாரா, அவரைத் தனது சொந்த சகோதரரைப் போல நடத்திவருகிறார்.
6. கிறிஸ்தவப் பெண்ணாக இருந்தாலும் சகோதர மதங்களையும் கடவுள்களையும் வழிபடுபவர். வேண்டுதலாகத் துலாபார காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருப்பவர். ரசிகர்கள் தனக்குக் கோயில் கட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்டு அதைத் தடுத்ததோடு “கோயில் கடவுளுக்கு மட்டுமே, மனிதர்களுக்கு அந்தத் தகுதி கிடையாது” என்று கூறியவர். ‘டோரா’ படத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’என்று டைட்டில் போட அதன் தயாரிப்பாளர் அனுமதி கேட்டபோது “அதை ரசிகர்கள் சொல்லட்டும். நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டாம்” எனத் தடுத்துவிட்டார்.
7. பெண்களை மதிக்கத் தெரிந்தவர்களை நயன்தாராவுக்கு மிகவும் பிடிக்கும். தன்னைச் சுற்றி இருப்பவர்களைக் கிரகித்துக்கொள்வதிலும் கெட்டிக்காரர். உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள், புரொடெக்ஷன் மேனேஜர்கள் தொடங்கி குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் பற்றி, யாரும் அறிமுகப்படுத்தாமலேயே கேட்டுத் தெரிந்துகொள்வார். அவர்களைப் பெயர் சொல்லி அழைத்து ஆச்சரியப்படுத்துவார். இயக்குநர் முதல் லைட்மேன்வரை எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுவார். கேரவனில் அடைப்பட்டுக் கிடப்பது நயன்தராவுக்குப் பிடிக்காது.
8. வடக்கத்திய உணவுகள் என்றால் நயன்தாராவுக்கு உயிர். வெளியூர் படப்பிடிப்பு என்றால் ஹோட்டலிலிருந்து கிளம்பி படப்பிடிப்புக்கு வரும் வழியில் இருக்கும் சிறு ரோட்டோரக் கடையின் அருகே காரை நிறுத்தச் சொல்லி, இட்லி அல்லது தோசையை வாங்கிவரச் சொல்லுவார்; காரிலேயே சாப்பிட்டுவிட்டுச் சரியான நேரத்துக்குச் சற்று முன்னதாகவே படப்பிடிப்பில் இருப்பார்.
9. மலையாளம், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பதும் சென்னையில் தங்கியிருப்பதும் தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போல் உணரவைப்பதாகக் கூறியிருக்கிறார் நயன்தாரா. சொந்த வாழ்க்கை குறித்த எந்த முடிவாக இருந்தாலும் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி ஆகியோரிடம் கேட்ட பிறகே முடிவெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
10. பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளை விட்டு விலகி இருக்கவே விரும்புபவர். பேட்டிக்காக அவரைத் துரத்திக்கொண்டேயிருப்பவர்களை, “பேசுவதற்கு எதுவுமே இல்லாதபோது எப்படி பேட்டி கொடுப்பது?” என்று சொல்லி அனுப்பிவிடுவார்.
நண்பரின் பார்வையில் நயன்தாரா
பெண் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தும் கதைகளில் நடிக்கத் தொடங்கிய பின் நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று சொல்லவைத்த படம் ‘மாயா’. அந்தப் படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன், நயன்தாரா பற்றிச் சுருக்கமாகவும் நறுக்கென்றும் பகிர்ந்துகொண்டதிலிருந்து…
“வெற்றியின் உச்சத்தைத் தொட்ட பிறகு பெரும்பாலான நட்சத்திரங்கள் கொஞ்சம் சுணங்கிவிடுவார்கள். அப்படியொரு ‘ஸ்லோ டவுன்’ நயன்தாராவிடம் இல்லை. மாலை 6 மணிக்கு முதல் ஷாட் என்றால், காட்சிக்கான காஸ்டியூம், மேக்-அப்புடன் மாலை 5.50 மணிக்கே ஸ்பாட்டில் வந்து நிற்பார். இது ஒருநாள், இருநாள் மட்டுமே அல்ல; அவருடன் பணியாற்றிய 35 நாட்களுக்கும் இந்த ஒழுங்கையும் சின்சியாரிட்டியையும் கண்டேன். ஒழுங்கு என்பது தொடர்ச்சி அறுபடாத ஒன்றாக இருக்க வேண்டும். அந்தக் கன்சிஸ்டன்சியை அவரிடம் பார்க்கலாம். ‘நாம லேட்டா வந்தாலும் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க’என்ற இடத்துக்கு வந்துவிட்ட பிறகும் இப்படி முழுமையான தொழில் பக்தியுடன் நடந்துகொள்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
நயன்தாராவுக்குச் சிறிய படம், பெரிய படம், பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற பாகுபாடு சுத்தமாகக் கிடையாது. எல்லோருக்கும் ஒரேவிதமான உழைப்பையும் ஈடுபாட்டையும் தருபவர். தொழில் தர்மம் என்று வந்துவிட்டால் யாருக்காகவும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளமாட்டார். ஒவ்வொரு படத்தையும் தனது முதல் படம்போல் நினைத்து வேலை செய்யக்கூடியவர்.
ஒரு நடிகையாக நயன்தாராவுக்கு அதிக விளக்கங்கள் கொடுக்க வேண்டியதில்லை. முதலில் கதைச்சுருக்கத்தைப் படித்துப் பிடித்திருந்தால் கதை கேட்க அழைப்பார். முழுக்கதையும் பிடித்துவிட்டால் பிறகு படப்பிடிப்பில் அவருக்குக் காட்சியை விளக்கிச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அவரே புரிந்துகொண்டு அந்தக் காட்சியைக் கச்சிதமாக நடித்துக் கொடுத்துவிடுவார். அந்த அளவுக்கு ஷார்ப். இயக்குநரின் நடிகையாக இருக்கவே நயன்தாரா விரும்புவார்.
அவருக்கு நிறைய ஆலோசனைகள் கொடுக்க வேண்டாம். நிறைய ஜானர்களில் நடித்திருப்பதால் கதாபாத்திரத்தை உள்வாங்கிக் வெளிப்படுத்துவதில் அவர் நிஜமான ‘மாயா’. ஷாட்டுக்கு சிலநொடிகள் முன்புவரை சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார். ஆக்ஷன் என்றதும் அவருக்குள் கதாபாத்திரத்தின் ஆன்மா நுழைந்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.
படப்பிடிப்பு தொடங்கியவுடன் நடிகருக்கும் இயக்குநருக்குமான சரியான ஒத்துசைவு உருவாக மூன்று நாட்கள் கூட ஆகிவிடும். ஆனால், நயன்தாரா முதல்நாளில் இருந்தாலே நம் அலைவரிசையில் பக்காவாக இணைந்துவிடுவார். ‘அஷ்வின்’ என்றே என்னை அழைத்து ஒரு நண்பனாக உணரவைத்தார். இன்றும் அவர் அப்படியே.