சுனில் நரேன் புதிய சாதனை: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸில் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர், பெங்களூரு அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். கடந்த சில போட்டிகளில் நடந்தது போலவே இந்த போட்டியிலும் பெங்களூரு அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் சொதப்பினர். கெயில் 0, கோலி 5, டிவில்லியர்ஸ் 10 ரன்களில் அவுட் ஆக ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் என்று பெங்களூரு அணி தடுமாறியது.
இந்த இக்கட்டில் இருந்து அணியை மீட்கும் முயற்சியில் மன்தீப் சிங், டிராவிஸ் ஹெட் ஆகி யோர் ஈடுபட்டனர். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் மேற் கொண்டு விக்கெட்களை இழக்காமல் பெங்களூரு அணி 14.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. மன்தீப் சிங் 52 ரன்களில் அவுட் ஆனார். மன்தீப் சிங் – ஹெட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 71 ரன்களைச் சேர்த்தது.
மன்தீப் சிங்கைத் தொடர்ந்து கேதார் ஜாதவ் 8, நெகி 5 ரன்களில் அவுட் ஆனார்கள். இருப்பினும் மறுபுறத்தில் உறுதியாக நின்று 5 சிக்சர்களை விளாசிய ஹெட், கடைசி கட்டத்தில் பெங்களூரு வின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 75 ரன்களைக் குவிக்க, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களைச் சேர்த்தது.
வெற்றிபெற 159 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த கொல்கத்தா அணி, ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. காயத்தால் கடந்த சில போட்டிகளில் ஆடாமல் இருந்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் லின், அதற்கெல்லாம் சேர்த்துவைத்து சிக்சர்களும் பவுண்டரிகளுமாக விரட்டினார். மறுபுறத்தில் அவரைவிட வேகமாக பேட்டை சுழலவிட்டார் சுனில் நரேன். பத்ரி வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்ட சுனில் நரேன், அதே வேகத்தில் 15 பந்துகளிலேயே அரைசதத்தை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசியவர் என்ற சாதனையையும் படைத்தார்.
நரேன் – லின் ஜோடியின் அதிரடியால் கொல்கத்தா அணி 6 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது. ஐபிஎல்லில் சாதனை படைத்த இந்த தொடக்க ஜோடியை சவுத்ரி பிரித்தார். 17 பந்துகளில் 54 ரன்களை விளாசிய சுனில் நரேன், சவுத்ரியின் பந்தில் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து லின்னும் (22 பந்தில் 50 ரன்கள்) அவுட் ஆக கொல்கத்தாவின் ரன் குவிக்கும் வேகம் சற்று குறைந்தது.
இருப்பினும் 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா 159 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.