பல வண்ண சுழல் விளக்கு : ராணுவத்துக்கு அனுமதி
முக்கியமான பணிக்கு செல்லும் போது மட்டும், தங்களின் வாகனங்களில், பல வண்ண சுழல் விளக்குகள் பயன்படுத்த, போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. நாட்டில், வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் வகையில், வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்த, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
‘ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா சபாநாயகர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் மட்டுமே தங்கள் வாகனங்களில், சிவப்பு சுழல் விளக்கை பயன்படுத்தலாம்’ என, மத்திய அரசு அறிவித்தது.
மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மட்டும், சிவப்பு சுழல் விளக்கை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவு, இந்த மாதம் முதல், அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பணிகள், பேரழிவு மீட்பு பணிகள் போன்றவற்றில் ஈடுபடும் போலீசார் மற்றும் ராணுவத்தினர் மட்டும், தங்கள் வாகனங்களில் பல வண்ண சுழல் விளக்குகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : தீயணைப்பு தொடர்பான பணிகள், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் பணி, பூகம்பம், வெள்ளம், நிலச்சரிவு, புயல், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகளின் மீட்பு பணிகள் போன்றவற்றில் ஈடுபடும், போலீசார், ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர், தங்கள் வாகனங்களில், சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய வண்ணங்களை வெளிப்படுத்தும், சுழல் விளக்குகளை பயன்படுத்தலாம். பணியில் இல்லாதபோது, வாகனங்களில், சுழல் விளக்கை பயன்படுத்த கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.